

நகோயா,
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாப்ட் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவுக்கு வரலாற்றின் முதல் பதக்கம் உறுதியாகியுள்ளது.
20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் ஜெய் மீனா, பிலிப்பைன்ஸ் வீரர் ஷெர்வின் நுகிட்டை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜெய் மீனா 4-3 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
சாப்ட் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறும் வீரர்களுக்கு பதக்கம் உறுதி என்பதால், ஜெய் மீனாவின் இந்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டில் சாப்ட் டென்னிஸ் பிரிவில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் உறுதியாகியுள்ளது.
இதன் மூலம், ஆசிய விளையாட்டு வரலாற்றில் சாப்ட் டென்னிஸில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை ஜெய் மீனா உறுதி செய்துள்ளார்.
இதனிடையே, பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் பதக்கம் வெல்ல முடியாமல் ஏமாற்றம் அளித்தார்.
ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர், இறுதிச் சுற்றின் கடைசி ஷாட்டில் 9.6 புள்ளிகளை மட்டுமே பெற்று 5-வது இடத்தைப் பிடித்து வெளியேறினார்.