உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்த காஜல், நீலம்

உலக சாம்பியன்ஷிப் தொடரின் ஒரே தொடரில் இரண்டு இந்தியப் பெண்கள் தங்கப் பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் பங்கேற்றது இதுவே முதல் முறை.
காஜல் தோசக், நீலம் சிரோஹி
Published on: 

அஸ்தானா,

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனைகள் காஜல் தோசக், நீலம் சிரோஹி ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். ஒரே உலக சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டு இந்திய வீராங்கனைகள் இறுதிப்போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்றது இந்திய மகளிர் மல்யுத்தத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

76 கிலோ பிரிவில் காஜலுக்கு வெள்ளி

பெண்களுக்கான 76 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் 18 வயதான காஜல் தோசக், உக்ரைனின் அனஸ்டாசியா அல்பியேவாவை எதிர்கொண்டார். தனது முதல் சீனியர் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற காஜல், இறுதிப்போட்டி வரை முன்னேறி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் காஜல் 6-8 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. ஏற்கெனவே 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டு முறை பட்டம் வென்றுள்ள காஜல், தனது முதல் சீனியர் உலக சாம்பியன்ஷிப் தொடரிலேயே பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

50 கிலோ பிரிவில் நீலம் சிரோஹிக்கு வெள்ளி

பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் 26 வயதான நீலம் சிரோஹி, ஜப்பானின் யுய் சுசாகியை எதிர்கொண்டார். நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற சுசாகிக்கு எதிராக நீலம் கடுமையாக போராடி தோல்வியைதழுவினார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

ஒரே தொடரில்

உலக சாம்பியன்ஷிப் தொடரின் ஒரே தொடரில் இரண்டு இந்தியப் பெண்கள் தங்கப் பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் பங்கேற்றது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு, 2021-ஆம் ஆண்டு அன்ஷு மாலிக் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை எட்டிய முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றதுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தார்.

தற்போது காஜல் தோசக், நீலம் சிரோஹி ஆகிய இருவரும் ஒரே தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் இந்திய மகளிர் மல்யுத்த வரலாற்றில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com