

கொரிய பேட்மிண்டன் பட்டத்திற்கான போட்டிகள் தென் கொரியாவின் ஆசன் நகரில் நடந்தன. இதில், ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில், உலக தர வரிசையில் 68-வது இடம் வகிக்கும், சீனாவை சேர்ந்த ஜூ சுவான்சென் (வயது 22), சக நாட்டு வீரரான யூ எபினை எதிர்கொண்டு விளையாடினார்.
இந்த போட்டியில் 21-16, 23-21 என்ற செட் கணக்கில் எபினை வீழ்த்தி சீன வீரர் சுவான்சென் பட்டம் வென்றார். உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் போட்டியில் முதன்முறையாக பெற்ற அவருடைய வெற்றி இதுவாகும்.
வெற்றிக்கு பின்னர் அவர் கூறும்போது, பட்டம் வெல்ல வேண்டும் என்ற இலக்குடன்தான் நான் வந்தேன். ஆனால், விளையாட தொடங்கியதும் ஒவ்வொரு புள்ளியையும் கைப்பற்றுவதற்கான போராட்டத்தில் கவனம் செலுத்தினேன்.
உண்மையில், முடிவை பற்றி அதிகம் எண்ணாமல் விளையாடினேன். முடிவில், பயிற்சியின்போது நாங்கள் மேற்கொண்ட கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. பட்டம் வெல்ல முடிந்ததற்காக உண்மையாகவே நான் திருப்தி அடைகிறேன் என்றார்.