குமாமோட்டோ மாஸ்டர்ஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய லக்சயா சென்... ஸ்ரீகாந்த் வெளியேற்றம்

அரையிறுதியில் இந்தோனேசியாவின் ஆல்வி பர்ஹானை லக்சயா சென் எதிர்கொள்ள உள்ளார்.
லக்சயா சென்
Published on: 

குமாமோட்டோ,

ஜப்பானில் நடைபெற்று வரும் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதியில் ஜப்பானின் யுஷி தனகாவை நேர் செட்களில் வீழ்த்தி அவர் இந்த முன்னேற்றத்தைப் பெற்றுள்ளார். மற்றொரு இந்திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதியில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

நேர் செட்களில் வெற்றி

இத்தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் லக்சயா சென், ஜப்பானின் யுஷி தனகாவை எதிர்கொண்டார்.

தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய லக்சயா சென் முதல் செட்டை 21-16 என்ற கணக்கில் கைப்பற்றினார். 2-வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர், 21-15 என வெற்றி பெற்றார். 40 நிமிடங்களில் ஆட்டத்தை முடித்த லக்ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதி

இந்தத் தொடரில் லக்சயா சென் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முதல் சுற்றில் சீன தைபேயின் சி யூ-ஜென்னை 21-19, 21-18 என்ற கணக்கில் வீழ்த்தினார். 2-வது சுற்றில் சீனாவின் டோங் தியான் யாவோவை 21-8, 21-14 என்ற கணக்கில் தோற்கடித்தார்.

அடுத்து நடைபெற உள்ள அரையிறுதியில் இந்தோனேசியாவின் ஆல்வி பர்ஹானை லக்சயா சென் எதிர்கொள்ள உள்ளார்.

ஸ்ரீகாந்த் போராடித் தோல்வி

மற்றொரு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பானின் கோகி வதனாபேவை எதிர்கொண்டார்.

முதல் செட்டில் கடுமையாகப் போராடிய ஸ்ரீகாந்த், 22-24 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். 2-வது செட்டிலும் 15-21 என்ற கணக்கில் தோற்றார். இதனால் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற வதனாபே அரையிறுதிக்கு முன்னேறினார்.

X