

ஷென்சென்,
சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்சயா சென், கனடாவின் விக்டர் லாயிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஷென்செனில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் 2021-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற லக்சயா சென், உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள கனடாவின் விக்டர் லாயை எதிர்கொண்டார்.
38 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியில் லக்சயா சென் 14-21, 7-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
மற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் கடாம்பி ஸ்ரீகாந்த், தைவான் வீரர் சி யூ ஜென்னை எதிர்கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய ஸ்ரீகாந்த் 21-16, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா - தனிஷா கிராஸ்டோ இணை முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.