

2026–2030 ஆம் ஆண்டுக்கான சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு சம்மேளனத்தின் (ISSF) வீரர்கள் குழு உறுப்பினராக இந்தியாவின் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிஸ்டல் பிரிவில் போட்டியிட்டு அவர் இந்தப் பொறுப்பைப் பெற்றுள்ளார்.
இந்தத் தேர்தலில் 20 நாடுகளைச் சேர்ந்த 22 வீரர்கள் போட்டியிட்ட நிலையில், உலகம் முழுவதும் 590 வீரர்கள் வாக்களித்தனர். ரைபிள், பிஸ்டல், ஷாட்கன் ஆகிய மூன்று பிரிவுகளிலிருந்து தலா இரண்டு பேர் என மொத்தம் ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வீரர்களின் நலன், உரிமைகள், பாதுகாப்பு, போட்டி விதிமுறைகள், பரிசுத்தொகை உயர்வு மற்றும் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக ISSF நிர்வாகத்திடம் கருத்துகளை எடுத்துரைப்பது வீரர்கள் குழுவின் முக்கியப் பணியாகும்.
குறிப்பாக, வீரர்களுக்கான நிதி உதவி, வேலைவாய்ப்பு வாய்ப்புகள், மனநல ஆதரவு மற்றும் ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கைக்கான திட்டங்களை மேம்படுத்துவதில் மனு பாக்கர் கவனம் செலுத்த உள்ளார். 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து வெண்கலப் பதக்கங்களை வென்ற மனு பாக்கர், ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற சுதந்திர இந்தியாவின் முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றவர். தற்போது சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டின் நிர்வாகத்தில் வீரர்களின் பிரதிநிதியாகப் பொறுப்பேற்றிருப்பது இந்திய விளையாட்டுத் துறைக்குக் கிடைத்துள்ள மற்றொரு முக்கிய அங்கீகாரமாகும்.
இது தொடர்பாக மனு பாக்கர் கூறியதாவது,
தினமும் துப்பாக்கி சுடுதல் போட்டிக் களத்தில் இருப்பதன் மூலம் விளையாட்டு வீரர்களுக்கு என்னென்ன தேவைகள் உள்ளன என்பதை நேரடியாகப் புரிந்துகொள்ள முடிகிறது. தெளிவான போட்டி விதிமுறைகள், முறையான போட்டி அட்டவணைகள் மற்றும் வலுவான ஆதரவு அமைப்புகள் ஆகியவை வீரர்களுக்கு மிகவும் அவசியமானவை. இந்தப் புதிய பொறுப்பின் மூலம் அனைத்து விளையாட்டு வீரர்களின் கருத்துகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கவும், அடிமட்ட நிலையில் உள்ள இளம் திறமையாளர்களைக் கண்டறிந்து அவர்களைச் சிறந்த வீரர்களாக உருவாக்கவும் உறுதியாகச் செயல்படுவேன். மேலும், துப்பாக்கி சுடுதல் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த அனைவருடனும் இணைந்து செயல்பட்டு, ஒட்டுமொத்த துப்பாக்கி சுடுதல் விளையாட்டையும் அடுத்தகட்ட உயரத்திற்குக் கொண்டு செல்ல பாடுபடுவேன். என தெரிவித்துள்ளார்.