

புதுடெல்லி,
துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு சம்மேளனத்தின் (ISSF) வீரர்கள் குழுவுக்கு 2026 முதல் 2030-ம் ஆண்டு வரையிலான காலத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற அவருக்கு இந்தப் புதிய பொறுப்பு கிடைத்துள்ளது.
ஐ.எஸ்.எஸ்.எப். வீரர்கள் குழுவுக்கான தேர்தலில் ரைபிள், பிஸ்டல், ஷாட்கன் ஆகிய 3 பிரிவுகளிலும் இருந்து 20 நாடுகளைச் சேர்ந்த 22 வீரர்கள் போட்டியிட்டனர். இதில் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கரும் வேட்பாளராகக் களமிறங்கினார்.
கெய்ரோவில் நடைபெற்ற 300 மீட்டர் ரைபிள் உலக சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ரைபிள், பிஸ்டல், ஷாட்கன் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளின்போது ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஒவ்வொரு பிரிவிலும் தலா 2 பேர் என மொத்தம் 6 வீரர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கரும் இடம்பிடித்துள்ளார். மீதமுள்ள உறுப்பினர்களை ஐ.எஸ்.எஸ்.எப். நிர்வாகக் குழு நியமிக்க உள்ளது.
தேர்வு செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்த மனு பாக்கர், தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த சக வீரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
வீரர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, போட்டி விதிகள் மற்றும் அட்டவணைகளில் தெளிவைக் கொண்டுவருவது, வீரர்களுக்கான ஆதரவு வசதிகளை மேம்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்போவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், இளம் வயதிலேயே திறமையான வீரர்களை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதுடன், அனைத்து வீரர்களின் கருத்துகளுக்கும் உரிய முக்கியத்துவம் கிடைக்கச் செய்யப் பாடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் மனு பாக்கர் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். ஒரே ஒலிம்பிக் தொடரில் இரண்டு பதக்கங்களை வென்ற சுதந்திர இந்தியாவின் முதல் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார்.
தற்போது சர்வதேச அளவில் துப்பாக்கி சுடுதல் வீரர்களின் பிரதிநிதியாகச் செயல்படும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிற்குத் தயாராகி வரும் நிலையில், உலக அளவில் வீரர்களின் நலனுக்காகவும் மனு பாக்கர் குரல் கொடுக்க உள்ளார்.