

புதுடெல்லி,
2030-ம் ஆண்டு காமவெல்த் விளையாட்டு போட்டி ஆமதாபாத்தில் நடக்கிறது. 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற இந்தியா விண்ணப்பித்து இருக்கிறது. ஒலிம்பிக் போட்டியை முதல்முறையாக நடத்த வேண் டும் என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்தியாவில், சர்வதேச போட்டிகளை நடத்தும் தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு வழங்கப் படும் நிதியுதவியை பலமடங்கு உயர்த்தி மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று அறிவித்தது. தற்போது சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கு தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 கோடி வழங்கப்படுகிறது. இனிமேல் அந்த நிதியுதவி ரூ.50 கோடியாக உயர்த்தப்படுகிறது. இது குறித்து மத்திய விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
இனிவரும் காலங்களில் சர்வதேச விளையாட்டு போட்டியை நடத்தும் தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு, அந்த போட்டியின் தன்மை. முக்கியத்துவம், பங்கேற்கும் நாடுகள், வீரர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை பொறுத்து ரூ.50 கோடி வரை நிதியுதவி வழங்கப்படும். சம்மேளனங்கள் சமர்ப்பிக்கும் முன்மொழிவுகளை விளையாட்டு துறை செயலாளர் தலைமையிலான பிரத்யேக கமிட்டி மதிப்பீடு செய்து நிதியுதவிக்கான அனுமதியை அளிக்கும்.
ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா பதக்கங்கள் வென்ற அல்லது டாப்-10 இடங்களுக்குள் வந்த விளையாட்டுகளாக இருந்தால் அதிகபட்சமாக ரூ.50 கோடி நிதியுதவி வழங்கப்படும். இத்தகைய சர்வதேச போட்டிகள் தனிநபர் பிரிவாக இருந்தால் 50 நாடுகளும், 500 வீரர்களும், அணி போட்டியாக இருந்தால் 12-க்கு மேற்பட்ட நாடு களும் 200 வீரர்களும் பங்கேற்க வேண்டியது அவசியமானதாகும்.
அடுத்த நிலையாக ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப்பில் முதல் 16 இடங்களுக்குள் வந்த விளையாட்டு பந்த யங்களை நடத்தினால் அத்தகைய போட்டிக்கு அதிகபட்சமாக ரூ.20 கோடி வழங்கப்படும். இதே போல் 50-க்கு மேற் பட்ட நாடுகள் பங்கேற்கும் உள்நாட்டு பாரம்பரிய விளையாட்டுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு ரூ.20 கோடி அளிக்கப்படும். மேலும் தேசிய விளையாட்டு போட்டியை நடத்த ரூ.50 கோடி வரை வழங்கவும் வகை செய்யப்பட்டுள் ளது. இந்த நிதியை விளையாட்டு உபகரணங்கள் வாங்குதல், தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு ஊதியம் அளித்தல் உள்ளிட்ட விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம். அத்துடன் உயர்தரமான சிறப்பு பயிற்சியை வழங்குவதற்காக, நவீன விளையாட்டு அறிவியல் உபகரணங்களை கொண்ட ஒலிம்பிக் பயிற்சி மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையமும் ஒரு குறிப்பிட்ட விளையாட்டுக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்படும். அங்கு மிகச்சிறந்த நவீன பயிற்சி வசதிகளும் நிபுணர்களும் இருப்பார்கள். இது இந்திய வீரர்கள் வெளிநாட்டுப் பயிற்சிகளை சார்ந்திருப்பதை குறைக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.