

சென்னை,
41-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 5 நாட்கள் நடந்தது. 14. 16, 18, 20 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் இருபாலருக்கும் போட்டி நடைபெற்றது. கடைசி நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 20 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தமிழக வீராங்கனைகள் சாதனா ரவி டிரிம்பிள் ஜம்ப்பில் தங்கப்பதக்கமும், பாவனா 200 மீட்டர் ஓட்டத்தில் புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கமும் வென்றனர். ஆண்களுக்கான 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 200 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் நீல் சாம்ராஜ் தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கமும், 20 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஈட்டி எறிதலில் தரணிதரன் தங்கப்பதக்கமும் கைப்பற்றினர். போட்டிகள் முடிவில் ஆண்கள் பிரிவில் உத்தரபிரதேச அணியும் (145 புள்ளி), பெண்கள் பிரிவில் தமிழக அணியும் (175.2 புள்ளி) முதலிடம் பிடித் தன. ஒட்டு மொத்தத்தில் தமிழக அணி (317.2 புள்ளி) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அரியானா (303 புள்ளி) 2-வது இடத்தை பிடித்தது. தமிழகத்தை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் நீல் சாம்ராஜ் (18 வயது), உயரம் தாண்டுதல் வீரர் அம்பிரிஷ் (20 வயது) சிறந்த வீரர்களாகவும், 100 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனை அபிநயா சிறந்த வீராங்கனையாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாநில அணிகளுக்கு பரிசுக் கோப்பையை வழங்கினார். தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டி.கே.ராஜேந் திரன், துணைத் தலைவர் லீமா ரோஸ் எம்.எல்.ஏ., செயலாளர் சிவகுமார், முன்னாள் செயலாளர் லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.