

ஐச்சி-நகோயா,
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில், இந்தியாவின் சார்பில் நிஷாத் குமார் மற்றும் மோனா அகர்வால் ஆகியோர் தேசியக் கொடியை ஏந்திச் செல்ல உள்ளனர்.
இந்தியாவின் முன்னணி பாரா தடகள வீரரான நிஷாத் குமார், இத்தொடரில் இரண்டு தங்கப் பதக்கங்களை கைப்பற்றினார்.
ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் டி47 பிரிவில் 7.11 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றார். தொடர்ந்து, உயரம் தாண்டுதல் டி47 பிரிவில் 2.04 மீட்டர் உயரம் தாண்டி போட்டி சாதனையுடன் இரண்டாவது தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இதன் மூலம், ஒரே ஆசிய பாரா விளையாட்டுப் போட்டித் தொடரில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய வீரர்கள் பட்டியலில் நிஷாத் குமாரும் இணைந்தார். இதற்கு முன்பு அன்குர் தமா, ஷீத்தல் தேவி ஆகியோர் இந்த சாதனையைப் படைத்திருந்தனர்.
பாரா துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மோனா அகர்வால் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்எச்1 பிரிவில் 250.0 புள்ளிகள் குவித்து போட்டிச் சாதனையுடன் தங்கம் வென்றார். இறுதிப்போட்டியில் ஆறாவது இடத்தில் இருந்த அவர், சிறப்பாகச் செயல்பட்டு முதலிடத்தைப் பிடித்தார். இந்தியாவின் அவனி லேகரா 249.6 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
தொடர்ந்து, இன்று நடைபெற்ற பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் எஸ்எச்1 பிரிவில் 357.5 புள்ளிகள் குவித்து உலகச் சாதனையுடன் இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றார். இதற்கு முன்பு ஸ்வீடன் வீராங்கனை அன்னா பென்சன் 356 புள்ளிகள் எடுத்திருந்ததே உலகச் சாதனையாக இருந்தது.
தடகளத்தில் நிஷாத் குமாரும், துப்பாக்கி சுடுதலில் மோனா அகர்வாலும் தலா இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இதையடுத்து இருவரும் நாளை நடைபெற உள்ள ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில் இந்திய தேசியக் கொடியை ஏந்தி செல்ல உள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பு, போட்டிகளில் அவர்கள் வெளிப்படுத்திய சிறப்பான செயல்பாட்டுக்கு கிடைத்த கவுரவமாகும்.