ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 2-வது இடம் பிடித்தது.
புதுடெல்லி,
26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவில் உள்ள குமி நகரில் கடந்த 27-ந் தேதி தொடங்கியது. இதில் 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த போட்டியில் சீனா 15 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம் என 26 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. இந்தியா 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என 24 பதக்கங்களுடன் 2-வது இடத்தை தனதாக்கியது.
இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், "தென் கொரியாவில் சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நமது அணியின் அற்புதமான செயல்திறனுக்காக இந்தியா பெருமை கொள்கிறது. ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கடின உழைப்பும் உறுதியும் போட்டி முழுவதும் தெளிவாகத் தெரிந்தது. விளையாட்டு வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.






