

சென்னை,
டெக்பால் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் குயின்சி அரையிறுதியில் தோல்வியடைந்தார்.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் குயின்சி, இந்தோனேசியாவின் சுமையாவை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதல் செட்டை குயின்சி 12-7 என்ற கணக்கில் கைப்பற்றி சிறப்பான தொடக்கம் கொடுத்தார். ஆனால் அடுத்த 2 செட்களிலும் சுமையா ஆதிக்கம் செலுத்தினார்.
2-வது செட்டை 12-9 என்றும், 3-வது செட்டை 12-7 என்றும் கைப்பற்றிய சுமையா, ஆட்டத்தை 2-1 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
அரையிறுதியில் தோல்வியடைந்தாலும் குயின்சிக்கு பதக்கம் வெல்லும் வாய்ப்பு இன்னும் உள்ளது. நாளை நடைபெறும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ஜப்பானின் யுய்னா சகாமோட்டோவை குயின்சி எதிர்கொள்கிறார்.
முன்னதாக நேற்று நடைபெற்ற டெக்பால் கலப்பு இரட்டையர் 'ரிப்பேசார்ஜ்' போட்டியில், குயின்சி டிசௌசா - முகமது அனாஸ் இம்ரான் பெக் ஜோடி வெற்றி பெற்றது.
இந்திய ஜோடி, பிலிப்பைன்ஸின் அபுலென்சியா ஜோஹானா - அகஸ்டின் பிரின்ஸ் ஜோடியை 12-3, 12-6 என்ற செட் கணக்கில் 2-0 என வீழ்த்தி, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு முன்னேறியது.
இதனால் குயின்சிக்கு பெண்கள் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் என இரு பிரிவுகளிலும் பதக்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளது.