

லக்னோ,
இந்தியாவின் இளம் பேட்மிண்டன் வீராங்கனை ரக்சிதா ஸ்ரீ சந்தோஷ் ராம்ராஜ், மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான பி.டபிள்யூ.எப். உலகத் தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி 39-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஹாங்காங் ஓபன் தொடரின் முதல் சுற்றில், உலகின் 20-ம் நிலை வீராங்கனையும் முன்னாள் ஐரோப்பிய விளையாட்டுப் போட்டிகளின் சாம்பியனுமான மியா பிளிச்பெல்ட்டை 21-18, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார் ரக்சிதா.
தொடர்ந்து நடைபெற்ற அடுத்த சுற்றில், டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனும் உலகின் 4-ம் நிலை வீராங்கனையுமான சீனாவின் சென் யூ பெய்யை எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியின் இரண்டாவது செட்டில் 10 புள்ளிகள் பின்தங்கியிருந்தபோதும் மனம் தளராமல் விளையாடிய ரக்சிதா, 21-18, 24-22 என்ற கணக்கில் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
இந்த வெற்றி குறித்து அவர் கூறுகையில், "அவர் எனக்கு மிகவும் பிடித்தமான வீராங்கனை. அவரை நான் தோற்கடித்ததை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை" என்றார்.
இருப்பினும், காலிறுதியில் தாய்லாந்தின் போர்ன்பாவீ சோசுவோங்கிடம் 19-21, 16-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
ரக்சிதாவின் அதிகபட்ச உலகத் தரவரிசை 37-வது இடமாகும். தற்போது 38,617 புள்ளிகளுடன் தரவரிசையில் 39-வது இடத்துக்கு முன்னேறியுள்ள அவர், மீண்டும் முதல் 40 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளார்.