அமெரிக்க ஓபன் ஸ்குவாஷ்: காலிறுதிக்கு முன்னேறிய சிவசங்கரி... உலகின் நம்பர் 1 வீராங்கனையுடன் மோதல்

காலிறுதிப் போட்டியில் சிவசங்கரிக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது.
அமெரிக்க ஓபன் ஸ்குவாஷ்: காலிறுதிக்கு முன்னேறிய சிவசங்கரி... உலகின் நம்பர் 1 வீராங்கனையுடன் மோதல்
Published on: 

பிலடெல்பியா,

அமெரிக்க ஓபன் ஸ்குவாஷ் தொடரில் மலேசிய வீராங்கனை எஸ். சிவசங்கரி காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

5-வது வெற்றி

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் உள்ள ஆர்லன் ஸ்பெக்டர் அமெரிக்க ஸ்குவாஷ் மையத்தில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 5-ம் நிலை வீராங்கனையாகக் களமிறங்கிய சிவசங்கரி, இரண்டாவது சுற்றில் 25-ம் நிலை வீராங்கனையான கென்சி ஐமனை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிவசங்கரி, 11-3, 11-7, 11-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் கென்சி ஐமனுக்கு எதிரான சர்வதேசப் போட்டிகளில் தொடர்ச்சியாக 5-வது வெற்றியைப் பதிவு செய்தார்.

காலிறுதி

காலிறுதிப் போட்டியில் சிவசங்கரிக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது. அவர் எகிப்தின் அமீனா ஓர்பியை எதிர்கொள்ள உள்ளார். உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஓர்பி, இந்தத் தொடரிலும் முதல் நிலை வீராங்கனையாக களமிறங்கியுள்ளார்.

ஓர்பி தனது இரண்டாவது சுற்றில் சகநாட்டை சேர்ந்த ஹனா மொஅதஸை 11-4, 11-0, 11-9 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள சிவசங்கரி, உலகின் முதல்நிலை வீராங்கனையான ஓர்பியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

X