

ஷென்சென்,
சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, டென்மார்க்கின் கிம் ஆஸ்ட்ரப்-ஆண்டர்ஸ் ராஸ்முசென் இணையை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 21-13, 16-21, 21-18 என்ற செட் கணக்கில் டென்மார்க் இணையை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த தொடரில் இந்தியா சார்பில் தற்போது சாத்விக்-சிராக் ஜோடி மட்டுமே களத்தில் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.