

நகோயா,
ஈட்டி எறிதலில் இந்தியாவின் யஷ்வீர் சிங் வெள்ளியும், ரோகித் யாதவ் வெண்கலமும் வென்று அசத்தியுள்ளனர்.
20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர்கள் இரட்டைப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் யஷ்வீர் சிங் 85.72 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் அவர் தனது தனிப்பட்ட சிறந்த சாதனையையும் பதிவு செய்தார்.
மற்றொரு இந்திய வீரரான ரோகித் யாதவ் 84.35 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இலங்கையின் ரூமேஷ் பத்திரகே 88.55 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
இதன் மூலம் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி மற்றும் வெண்கலம் என இரட்டைப் பதக்கம் கிடைத்துள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 9-வது நாளில் இந்தியா மொத்தம் 8 பதக்கங்களை வென்றுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 4 தங்கம், 20 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 45 ஆக உயர்ந்துள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தற்போது 12-வது இடத்தில் உள்ளது.