காமன்வெல்த் போட்டியில் இருந்து துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம் நீக்கம்... ஐரோப்பிய நாடுகள் மீது இந்திய வீரர்கள் பாய்ச்சல்

காமன்வெல்த் போட்டிகள் 2026ல் இருந்து மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தை ஆகிய போட்டிகளை நீக்கியுள்ளது வீரர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
காமன்வெல்த் போட்டியில் இருந்து துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம் நீக்கம்... ஐரோப்பிய நாடுகள் மீது இந்திய வீரர்கள் பாய்ச்சல்
Published on

புதுடெல்லி,

ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் 2026ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில், மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தை ஆகிய விளையாட்டுகள் காமன்வெல்த் போட்டியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன.

கடந்த 2018ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா மொத்தம் 16 பதக்கங்களை அள்ளியது. அவற்றில், 7 தங்கம், 4 வெள்ளி மற்றும் 5 வெண்கலங்கள் அடங்கும்.

இதேபோன்று மல்யுத்தத்தில் மொத்தம் 12 பதக்கங்களை இந்தியா வென்றது. அவற்றில், 5 தங்கம், 3 வெள்ளி மற்றும் 4 வெண்கலங்கள் அடங்கும்.

இந்தியாவின் ஒலிம்பிக் பதக்க வீரரான பஜ்ரங் பூனியா, 2018ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியிலும் தங்க பதக்கம் வென்றுள்ளார். அவர் கூறும்போது, காமன்வெல்த் போட்டிகள் 2026ல் இருந்து மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தை ஆகிய போட்டிகளை நீக்கி காமன்வெல்த் போட்டிகளுக்கான கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு தவறானது. மல்யுத்தம் நம்முடைய மிக பழமையான விளையாட்டு.

அதனை நீக்கியிருப்பது சரியல்ல. எனினும், இந்த முடிவு நம்முடைய மல்யுத்த கூட்டமைப்பின் கைகளில் இல்லை. அவர்களும், வீரர்களாக நாங்களும் வேண்டுகோள் விடுக்கலாம். இது தவறு என எடுத்து கூறலாம். அதன்பின்னர், காமன்வெல்த் போட்டிகளுக்கான கூட்டமைப்பின் கைகளிலேயே மற்றவை உள்ளன என்று கூறியுள்ளார.

காமன்வெல்த் போட்டி துப்பாக்கி சுடுதலில் 2 வெள்ளி பதக்கங்களையும், உலக கோப்பை மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் 2 தங்க பதக்கங்களையும் வென்றுள்ள கேல் ரத்னா விருது பெற்ற ரொஞ்சன் சிங் சோதி கூறும்போது, ஐரோப்பிய நாடுகள் இந்தியாவுடன் போட்டி போட முடியாது. அதனால், ஒரு நோக்கத்துடனேயே இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என கடுமையாக சாடியுள்ளார்.

ஏனெனில், காமன்வெல்த்தில் ஒவ்வொரு போட்டியையும் வென்று, பதக்கங்களை நாம் பெற்றுள்ளோம். அதிக அளவில் தங்கம் வென்றுள்ளோம். சில நேரங்களில் தங்கம், வெள்ளி இரண்டையும் வென்றிருக்கிறோம்.

அதனால், துப்பாக்கி சுடுதலை நீக்கியது தவறான முடிவு. ஒலிம்பிக்கில் இந்த போட்டி இருக்கும்போது, காமன்வெல்த்தில் ஏன் இருக்க கூடாது? என்று அவர் கேட்டுள்ளார். வரும் ஜூலையில் நடைபெற இருக்கிற 2022ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டியிலும் துப்பாக்கி சுடுதல் இடம் பெறவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com