“வரலாறு படைக்கவே சிலர் பிறக்கிறார்கள்” - உலக மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற மனிஷா

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
மனிஷா பன்வாலா
Published on: 

புதுடெல்லி,

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய வீராங்கனை மனிஷா பன்வாலா, “வரலாறு படைக்கவே சிலர் பிறக்கிறார்கள்” என்று கூறினார்.

வெற்றி

கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான சீனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்களுக்கான 59 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் மனிஷா பன்வாலா, அமெரிக்க வீராங்கனை அபிகேல் எலிசபெத் நெட்டேவை எதிர்கொண்டார்.

இந்தப் போட்டியின் தொடக்கத்தில் மனிஷா 0-6 என்ற புள்ளிகள் கணக்கில் பின்தங்கினார். இருப்பினும், மனம் தளராமல் தொடர்ந்து போராடிய அவர், அடுத்தடுத்து புள்ளிகளைக் குவித்து 8-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார்.

வரலாறு படைக்கவே பிறக்கிறார்கள்

டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மனிஷா பன்வாலா, தனது வெற்றியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று தெரிவித்தார்.

“இந்த வெற்றியின் மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. வரலாறு படைக்கவே சிலர் பிறக்கிறார்கள். அவர்களில் ஒருவராக நானும் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அடுத்த ஆண்டு எனக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். காயங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதுடன், உடல் மீட்பிலும் கவனம் செலுத்தி மீண்டும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்’ என்று தெரிவித்தார்.

X