தமிழக பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு ரூ. 1.25 கோடி ஊக்கத்தொகை; முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

துளசிமதி முருகேசனின் தொடர் வெற்றி சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு புதிய நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது.
தமிழக பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு ரூ. 1.25 கோடி ஊக்கத்தொகை; முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு
Published on: 

சென்னை,

தமிழக பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு ரூ. 1.25 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

தங்கம், வெள்ளி வென்ற துளசிமதி முருகேசன்

ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர் எஸ்எல்3-எஸ்யூ5 பிரிவில் தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் இடம்பெற்றிருந்த இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. அதேபோல், பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் எஸ்எல்3-எஸ்யூ5 பிரிவில் துளசிமதி முருகேசன் இடம்பெற்றிருந்த இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.

ரூ. 1.25 கோடி ஊக்கத்தொகை

இந்நிலையில், பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் பேட்மிண்டனில் தங்கம், வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு ரூ. 1.25 கோடி ஊக்கத்தொகை வழங்ப்படும் என்றும் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பேட்மிண்டன் விளையாட்டில், பெண்கள் இரட்டையர் எஸ்எல்3-எஸ்யூ5 பிரிவில் தங்கப் பதக்கமும், கலப்பு இரட்டையர் எஸ்எல்3-எஸ்யூ5 பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்ற இந்திய அணிகளுக்கும், அவ்வணிகளில் இடம்பெற்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்!

வீராங்கனை துளசிமதி முருகேசனின் சாதனைகளை பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.1.25 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர், இதுவரை 3 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அவரது தொடர் வெற்றி, சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு புதிய நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. அவரைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குத் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com