படித்துக் கொண்டே தான் விளையாட்டில் கவனம் செலுத்துகிறேன்: 3 பதக்கம் வென்ற துளசிமதி பேச்சு

இரு இறுதிப்போட்டியில் தோற்று வெள்ளிப்பதக்கம் பெற்றேன்.

படித்துக் கொண்டே தான் விளையாட்டில் கவனம் செலுத்துகிறேன்: 3 பதக்கம் வென்ற துளசிமதி பேச்சு
Published on: 

சென்னையில் நடந்த விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத் தொகை வழங்கும் விழாவில், பாரா ஆசிய விளையாட்டில் 3 பதக்கம் வென்று வரலாறு படைத்த பேட்மிண்டன் வீராங்கனை 24 வயதான துளசிமதி முருகேசன் பேசியதாவது:-

ஜப்பானில் நடந்த பாரா ஆசிய விளையாட்டில் ஒரு தங்கம், 2 வெள்ளி என 3 பதக்கம் வென்றேன். இதன் மூலம் ஆசிய விளையாட்டு பாரா பேட்மிண்டனில் 3 பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமையை பெற்றேன்.

வியூகம்

பாரா ஆசிய விளையாட்டில் எனக்கு ஒரே நாளில் மூன்று இறுதிப்போட்டிகளில் விளையாட வேண்டிய சூழல் ஏற்பட்டது முதல் இரு இறுதிப்போட்டியில் தோற்று வெள்ளிப்பதக்கம் பெற்றேன். கடைசியாக பெண்கள் இரட்டையர் இறுதி சுற்றில் பாராஒலிம்பிக் சாம்பியன்களான சீன ஜோடியை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அந்த போட்டிக்கு முன்பாக எனது தந்தையிடம் பேசினேன். அவர் கொடுத்த வியூகம் எனக்கு ஒரு தெளிவை தந்தது. அதன் பிறகு அந்த போட்டியில் வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினோம்.

அரசு கால்நடை மருத்துவ கல்லூரி

இந்த பதக்கங்களை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன். ஏனெனில் சிறு வயதில் இருந்து இப்போது வரை எல்லா வகையிலும் எனக்கு பக்கபலமாக இருந்து வருகிறார்.

நீங்க நினைக்கிற மாதிரி நான் வெளிநாட்டுக்கு சென்று பயிற்சி மேற்கொள்ளவில்லை. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்.டி.ஏ.டி.) மைதானங்களிலேயே பயிற்சி எடுத்து தான் சாதித்துள்ளேன். இந்த தருணத்தில் நான் எஸ்.டி.ஏ.டி.க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் எலைட் திட்டத்தில் நானும் இருக்கிறேன். இதன்படி பயிற்சி, போட்டிக்கு தயாராகுதல், பயணச் செலவு, ஊட்டச்சத்து உள்ளிட்டவற்றுக்காக ஆண்டுக்கு ரூ.30 லட்சம் ஒதுக்குகிறார்கள். ஏறக்குறைய 50 வீரர், வீராங்கனைகள் எலைட் திட்டத்தில் இடம் பெற்றுள்ளனர்.நான் தற்போது விளையாட்டு கோட்டாவில் நாமக்கல்லில் உள்ள அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் இறுதி யாண்டு படித்து வருகிறேன். படித்துக் கொண்டே தான் விளையாட்டில் கவனம் செலுத்துகிறேன்.என தெரிவித்தார்.

X