

கிளாஸ்கோ,
23-வது காமன்வெல்த் விளையாட்டு திருவிழா ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் இன்று தொடங்கி ஆகஸ்டு 2-ந்தேதி வரை நடக்கிறது.
இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. 1930-ம் ஆண்டு தொடங்கிய இந்த போட்டி 4 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கிறது. கடைசி யாக 2022-ம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காமில் இந்த போட்டி நடைபெற்றது.
இந்த நிலையில் 23-வது காமன்வெல்த் விளையாட்டு திருவிழா ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் இன்று தொடங்கி ஆகஸ்டு 2-ந்தேதி வரை நடக்கிறது. இதில் காமன்வெல்த் கூட்டமைப்பில் உள்ள இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, கென்யா, சிங்கப்பூர், பாகிஸ்தான், இலங்கை உள்பட 74 நாடுகளில் இருந்து ஏறக்குறைய 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
முதலில் இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் நடக்க இருந்தது. ஆனால் அதிக செலவினத்தை காரணம் காட்டி ஆஸ்திரேலியா பின்வாங்கி விட்டது. இதையடுத்து போட்டியை நடத்தும் வாய்ப்பு கிளாஸ்கோவுக்கு வழங்கப்பட்டதுடன், நிறைய போட்டிகள் அதிரடியாக நீக்கப்பட்டன. இந்த போட்டிக்கு ஸ்காட்லாந்து ரூ.2 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது. 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது செலவினம் 60 சதவீதம் குறைவாகும். இதில் தடகளம், பளுதூக்குதல், குத்துச்சண்டை, நீச்சல், கூடைப்பந்து (3×3), ஜிம்னாஸ்டிக்ஸ், சைக்கிளிங், ஜூடோ, நெட்பால், பவுல்ஸ் ஆகிய 10 விளையாட்டுகளில் 215 பந்தயங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் பாரா பிரிவினருக்கான 6 பந்தயங்களும் அடங்கும்.
இந்தியா சார்பில் 78 வீரர்கள், 48 வீராங்கனைகள் என மொத்தம் 126 பேர் கொண்ட அணி 8 விளையாட்டுகளில் களம் காணுகிறது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, பளு தூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு, குத்துச்சண்டை வீராங்கனை லவ் லினா மற்றும் ஜாஸ்மின் லம்போரியா, பிரீத்தி பவார், 400 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்தவரான தமிழகத்தின் விஷால், உயரம் தாண்டுதல் வீரர் சர்வேஷ் குஷாரே, நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஸ்ரீசங்கர், குண்டு எறிதல் வீரர் தேஜிந்தர் பால் சிங், வட்டு எறிதல் வீராங்கனை சீமா கலிரம்மா, ஜூடோ வீராங்கனை துலிகா மான் உள்ளிட்டோர் பதக்கம் வெல்லும் வாய்ப்பில் இருக்கிறார்கள்.
இந்தியா 2002-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து பதக்கப்பட்டியலில் டாப்-5 இடத்திற்குள் இருந்து வருகிறது. 2022-ம் ஆண்டு போட்டியில் 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என 61 பதக்கங்களை அறுவடை செய்து 4-வது இடத்தை பிடித்தது. ஆனால் கடந்த முறை இடம் பெற்றிருந்த பேட்மிண்டன், கிரிக்கெட், ஆக்கி, டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ், மல்யுத்தம் உள்ளிட்ட விளையாட் டுகள் இந்த சீசனில் இல்லாததால் இந்தியாவின் பதக்க வேட்டையை நிச் சயம் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதே போல் தொடர்ந்து 2-வது முறையாக துப்பாக்கி சுடுதலுக்கும் இடம் மறுக்கப்பட்டது.
இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடக்க விழா நடைபெறுகிறது. இந்திய அணிக்கு பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு, குத்துச்சண்டை மங்கை லவ் லினா ஆகியோர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்கள். முதல் நாளில் பவுல்ஸ் பந்தயம் மட்டுமே நடக்கிறது. மறுநாளில் இருந்து போட்டிகள் தொடர்ச்சியாக நடைபெறும். நிறைவு விழாவின் போது, 2030-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை நடத்த உள்ள இந்தியாவின் ஆமதாபாத்திடம் விளையாட்டுக்குரிய கொடி ஒப்படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.