74 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்கும் பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி டெல்லியில் இன்று தொடக்கம்

இந்த போட்டி இந்தியாவில் நடைபெறுவது இது 3-வது முறையாகும்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

புதுடெல்லி,

13-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்சில் இன்று (புதன்கிழமை) முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. மொத்தம் ரூ.20 கோடி பரிசுத் தொகைக்கான இந்த போட்டியில் 74 நாடுகளை சேர்ந்த 350 வீராங்கனைகள் 12 உடல் எடைப்பிரிவுகளில் பங்கேற்கிறார்கள். இதில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற 8 முன்னணி வீராங்கனைகளும் அடங்குவார்கள். இந்த போட்டி இந்தியாவில் நடைபெறுவது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2006, 2018-ம் ஆண்டுகளில் பெண்கள் உலக குத்துச்சண்டை டெல்லியில் நடந்து இருக்கிறது.

இந்தியா சார்பில் 12 வீராங்கனைகள் கோதாவில் குதிக்கிறார்கள். இவர்களில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ), கடந்த உலக போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நிகாத் ஜரீன் (50 கிலோ), பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய நிது ஹாங்காஸ் (48 கிலோ) உள்ளிட்டோர் முக்கியமானவர்கள். தொடக்க விழாவில் மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாக்குர், சர்வதேச குத்துச்சண்டை சங்க தலைவர் உமர் கிரெம்லிவ் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். போட்டியை தூர்தர்ஷன் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இந்த போட்டி 2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்றாக இருக்குமா? என்பதில் குழப்பம் நிலவுகிறது. ஒலிம்பிக்குக்கான தகுதி சுற்று போட்டியை யார் நடத்துவது என்பதில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில், சர்வதேச குத்துச்சண்டை சங்கம் இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு காரணமாக இன்னும் முடிவு அறிவிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com