

லக்னோ,
சையத் மோடி பேட்மிண்டன் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் திரீசா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.
இத்தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், முதல் நிலை ஜோடியான திரீசா - காயத்ரி, இந்தோனேசியாவின் நான்காம் நிலை ஜோடியான இஸ்யானா சியாஹிரா மீடா - ரிஞ்சானி க்வின்னாரா நாஸ்டினை எதிர்கொண்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தத் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றிருந்த திரீசா - காயத்ரி ஜோடி, இம்முறையும் பட்டத்தைத் தக்கவைத்து ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்புடன் களமிறங்கியது.
முதல் செட்டில் இரு ஜோடிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் இந்திய ஜோடி 24-22 என அந்தச் செட்டைக் கைப்பற்றியது.
ஆனால், இரண்டாவது செட்டில் இந்தோனேசிய ஜோடி ஆதிக்கம் செலுத்தியது. இந்திய வீராங்கனைகளின் தடுமாற்றத்தை பயன்படுத்திக்கொண்ட அந்த ஜோடி, 21-12 என எளிதில் வென்று போட்டியை சமன் செய்தது.
வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டிலும் இரு ஜோடிகளும் கடுமையாகப் போராடின. தொடக்கத்தில் இந்தோனேசிய ஜோடி முன்னிலை பெற்ற நிலையில், திரீசா - காயத்ரி ஜோடி மீண்டு வந்து முன்னிலை பெற்றது. இருப்பினும், இறுதிக்கட்டத்தில் சிறப்பாக விளையாடிய இந்தோனேசிய வீராங்கனைகள், 21-19 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டி சென்றனர்.