சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலி... வாழ்த்து தெரிவித்த டி.டி.வி. தினகரன்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற பிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

பிடே கிராண்ட் சுவிஸ் செஸ் தொடர் உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் நடந்து வந்தது. இதில் மகளிர் பிரிவில் நேற்று நடந்த 11-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் வைஷாலி 43-வது காய் நகர்த்தலில் முன்னாள் உலக சாம்பியன் சீனாவின் டான் ஜோங்ஜியுடன் டிரா செய்தார்.

11-வது சுற்று முடிவில் தமிழகத்தை சேர்ந்த வைஷாலியும் (6 வெற்றி, 4 டிரா, ஒரு தோல்வி) ரஷியாவின் கேத்ரினோ லாக்னோவும் (5 வெற்றி, 6 டிரா) தலா 8 புள்ளிகளுடன் சமநிலை வகித்தனர். இருப்பினும் அதிக வெற்றி அடிப்படையில் வைஷாலி தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அத்துடன் அடுத்த ஆண்டு நடக்கும் 8 வீராங்கனைகள் இடையிலான கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற பிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய இளம் வீராங்கனை வைஷாலி ரமேஷ் பாபு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று மகளிர் கேண்டிடேட்ஸ் செஸ் (Candidates ) தொடருக்கு தேர்வாகியுள்ள கிராண்ட் மாஸ்டர் வைஷாலி ரமேஷ்பாபு அவர்கள் மென்மேலும் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திட இந்நேரத்தில் வாழ்த்தி மகிழ்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com