

கெய்ரோ,
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் உதய்வீர் சித்து தங்கம் வென்றார்.
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தின் இறுதி சுற்றில் 8 வீரர்கள் கலந்து கொண்டனர். இலக்கை துல்லியமாக சுட்டு முன்னேறிய இந்திய வீரர் உதய்வீர் சித்து 246.6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
கடைசி இரு ரவுண்டில் 10.2, 9.8 வீதம் புள்ளிகள் எடுத்தது அவரை தங்கமகனாக ஜொலிக்க வைத்தது. அவரை விட 0.5 புள்ளி மட்டுமே பின்தங்கிய ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான ஜெர்மனியின் கிறிஸ்டியன் ரீட்ஸ் வெள்ளிப்பதக்கம் பெற்றார். இத்தாலியின் பாவ்லோ மோனா 219.8 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்தார்.
24 வயதான உதய்வீர் சித்து பஞ்சாப்பை சேர்ந்தவர். பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரான இந்தியாவின் சரப்ஜோத் சிங் தகுதி சுற்றோடு வெளியேற்றப்பட்டார்.