நீங்கள் இன்னும் வளர வேண்டும்... குகேஷ் பற்றிய கேள்விக்கு கார்ல்சன் பதில்

பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் மிக சிறந்த செஸ் விளையாட்டை வெளிப்படுத்தினர் என கார்ல்சன் கூறினார்.
நீங்கள் இன்னும் வளர வேண்டும்... குகேஷ் பற்றிய கேள்விக்கு கார்ல்சன் பதில்
Published on

ஸ்டாவஞ்சர்,

2025-ம் ஆண்டுக்கான நார்வே செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடந்தது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான தமிழக வீரர் குகேஷ், 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

இதில், அதிக புள்ளிகளை பெற்று முதல் இடம் பிடிக்கும் வீரர் வெற்றியாளராவார். இந்நிலையில், 10-ம் சுற்று போட்டியில் கார்ல்சன் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றார். இதனால், கார்ல்சன் 7-வது முறையாக நார்வே செஸ் பட்டம் வென்றுள்ளார்.

இறுதி சுற்று போட்டியில், கார்ல்சனை விட அதிக புள்ளிகளை பெற வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க வீரர் கருவானாவை எதிர்த்து விளையாடிய குகேஷ், செய்த பெரிய தவறால் அவர் 3-வது இடத்திற்கு சென்றார். கருவானா 2-வது இடத்தில் உள்ளார்.

10 சுற்று போட்டிகளின் முடிவில் 16 புள்ளிகளுடன் கார்ல்சன் முதல் இடம் பிடித்துள்ளார். கருவானா 15.5 புள்ளிகளுடனும் (2-வது இடம்), குகேஷ் 14.5 புள்ளிகளுடனும் (3-வது இடம்) உள்ளனர். இந்த போட்டியில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா 4-வது இடத்திலும் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 5-வது இடத்திலும், சீனாவின் வெய் யி கடைசி இடத்திலும் உள்ளனர்.

போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் கார்ல்சன் கூறும்போது, நான் சிறப்பாக உணர்கிறேன். போட்டி தொடரை வென்றது நிம்மதி அளிக்கிறது. போட்டி முடிவு, ரோலர்கோஸ்டர் போன்று இருந்தது. ஆனால் நன்றாக இருந்தது என்றார்.

குகேஷ் மற்றும் எரிகைசி பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், அவர்கள் எல்லோரும் நன்றாக விளையாடினார்கள். ஆனால், அவர்கள் இன்னும் தங்களை தயார்படுத்தி கொள்ள சிறிது நேரம் எடுத்து கொள்ள வேண்டும் என்றார். இதனால், அவர்கள் இன்னும் போட்டியில் விளையாட வளர வேண்டும் என்ற பொருள்பட கார்ல்சன் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து, அர்மீனியாவிலும் போட்டி தொடர் ஒன்று நடந்தது. அதில் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் மிக சிறந்த செஸ் விளையாட்டை வெளிப்படுத்தினர். குகேசுடன் விளையாடியது மனதில் நிற்கும் வகையில் இருந்தது என கூறினார்.

இந்த தொடரின் போட்டி ஒன்றில், கார்ல்சனை குகேஷ் வீழ்த்தியதும், தோல்வியை ஏற்று கொள்ள முடியாத மனநிலையில், கார்ல்சன் மேஜையின் மீது கையால் குத்தியது பரபரப்பாக பேசப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com