

இன்டியன்வெல்ஸ்,
பாரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள இன்டியன்வெல்ஸ் நகரில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 26-வது இடம் வகித்த இங்கிலாந்து வீரர் கேமரூன் நோரி, 36-ம் நிலை வீரரான ஜார்ஜியாவின் நிகோலோஸ் பாசிலாஷ்விலியை சந்தித்தார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை இழந்த கேமரூன் நோரி சரிவில் இருந்து அபாரமாக மீண்டு வந்து 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் நிகோலோஸ்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 51 நிமிடம் தேவைப்பட்டது. 1,000 தரவரிசை புள்ளி கொண்ட பட்டத்தை கேமரூன் நோரி வெல்வது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம் இன்டியன்வெல்ஸ் ஒற்றையர் பட்டத்தை உச்சி முகர்ந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் 26 வயதான கேமரூன் நோரி சொந்தமாக்கினார்.
தரவரிசையில் முன்னேற்றம்
மகுடத்தை சூடிய கேமரூன் நோரி ரூ.9 கோடியை பரிசாக அள்ளினார். 2-வது இடம் பெற்ற நிகோலோஸ் பாசிலாஷ்விலி ரூ.4 கோடியை பரிசாக பெற்றார். சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய கேமரூன் நோரி உலக ஒற்றையர் தரவரிசையில் 11 இடங்கள் முன்னேற்றம் கண்டு 15-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரநிலையாகும். இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட நிகோலோஸ் பாசிலாஷ்விலி 9 இடங்கள் உயர்ந்து 27-வது இடத்தை எட்டி இருக்கிறார்.
பாலா படோசா சாம்பியன்
பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை பாலா படோசா முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான விக்டோரியா அஸரென்காவை (பெலாரஸ்) எதிர்கொண்டார். 3 மணி 4 நிமிடம் நீடித்த திரில்லிங்கான இந்த ஆட்டத்தில் பாலா படோசா 7-6 (7-5), 2-6, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் 2 முறை பட்டம் வென்றவரான அஸரென்காவுக்கு அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தினார். இதனால் இன்டியன்வெல்ஸ் ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றிய முதல் ஸ்பெயின் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். இந்த ஆண்டில் அதிக நேரம் நீடித்த சர்வதேச பெண்கள் ஒற்றையர் இறுதிஆட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கிய பாலா படோசா ரூ.9 கோடியை பரிசாக தட்டிச்சென்றதுடன், 1000 தரவரிசை புள்ளியையும் கபளீகரம் செய்தார். இதன் மூலம் அவர் உலக பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் 14 இடங்கள் ஏற்றம் கண்டு தனது அதிகபட்ச தரநிலையாக 13-வது இடத்தை அடைந்துள்ளார். ரூ.4 கோடியை பரிசாக பெற்ற அஸரென்கா தரவரிசையில் 6 இடம் முன்னேறி 26-வது இடத்தை பிடித்து இருக்கிறார்.