காணாமல் போன சீன டென்னிஸ் வீராங்கனை; டென்னிஸ் போட்டியில் காணப்பட்டார்

காணாமல் போன சீன டென்னிஸ் வீராங்கனை பெங்க் சுவாய் டென்னிஸ் போட்டி ஒன்றில் இன்று காணப்பட்டார்.
காணாமல் போன சீன டென்னிஸ் வீராங்கனை; டென்னிஸ் போட்டியில் காணப்பட்டார்
Published on

பீஜிங்,

டென்னிஸ் இரட்டையர் பிரிவில், உலகின் நம்பர்.1 வீராங்கனையாக இருந்த சீனாவின் பெங்க் சுயாய், கடந்த நவம்பர் 2ந்தேதியன்று சீன சமூக வலைத்தளங்களில், சீன அரசில் உயர்பதவி வகித்த ஜாங் காவோலி, தன்னை வற்புறுத்தி பாலியல் உறவு வைத்து கொண்டார் என குறிப்பிட்டார்.

சமூக வலைத்தளங்களில் அவர் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே சீன அரசாங்கம் அந்த பதிவை நீக்கிவிட்டது. அவருடைய அந்த குற்றச்சாட்டு குறித்து சீன அரசு எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், அவருடைய அந்த பதிவிற்கு பின் அவரை காணவில்லை என்று புகார் எழுந்தது. அவரை பற்றிய தகவல்கள் ஏதும் இல்லை. அவரை யாரும் பார்க்கவோ அல்லது அவரை பற்றி கேள்விப்படவோ இல்லை என்று கூறப்பட்டது. சர்வதேச தளத்தில் இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து சர்வதேச ஒலிம்பிக் சங்கம் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் உறுப்பினர் டிக் பவுண்ட் கூறுகையில், சீன டென்னிஸ் வீராங்கனை காணாமல் போன சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சர்வதேச ஒலிம்பிக் சங்கம், சீனா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மகளிர் டென்னிஸ் சங்கம் கேட்டு கொண்டுள்ளது. இல்லையெனில், சீனாவில் டென்னிஸ் போட்டிகள் நடத்துவதை நிறுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளது. அவர்களுடைய இந்த முடிவுக்கு உலகின் நம்பர்.1 டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், டென்னிஸ் வீராங்கனை பெங்க் சுயாய் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பதிவாகியுள்ளார். வீடியோவில் அவர் சிரித்தபடி நிற்கிறார். அத்துடன் அவர் குழந்தைகளுக்கு ஆட்டோகிராப் போடுவதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.

37 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் பெங்க் சுயாய் சில நபர்களுக்கு மத்தியில் வரிசையில் ஒருவராக நிற்கிறார். பெங்க் சுயாய் இருக்கும் விளையாட்டு அரங்கத்தில், ஒருவர் இரண்டு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன், பெண்கள் இரட்டையர் பிரிவின் முன்னாள் உலக நம்பர் 1 வீராங்கனை - பெங்க் சுயாய் என்று கூறுகிறார். உடனே, பெங்க் கையசைத்து சிரிக்கிறார், பார்வையாளார்களிடம் இருந்து கைதட்டல்களையும் பெறுகிறார்.

அதேபோல, குளோபல் டைம்ஸ் முதன்மை ரிப்போர்ட்டர், 31 வினாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பெங்க் ஒரு பெரிய டென்னிஸ் பந்தில் குழந்தைகளுக்காக ஆட்டோகிராப் போட்டு கொடுக்கிறார். அத்துடன் குழந்தைகளுடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கிறார்.

அவரது மறைவு பற்றி விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா. சபையும் அழைப்பு விடுத்துள்ளது. அவருக்காக கோடிக்கணக்கான டாலர்களை இழக்கவும் தயார் என மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு தெரிவித்தது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையும் இந்த சம்பவத்தில் வருத்தம் தெரிவித்து இருந்தது.

இந்த சூழலில், விம்பிள்டன் மற்றும் பிரெஞ்சு ஓபனில் இரட்டையர் பிரிவின் முன்னாள் சாம்பியனான 35 வயதுடைய பெங்க், சீனாவின் பீஜிங் நகரில் நடந்த டென்னிஸ் போட்டி ஒன்றில் இன்று காணப்பட்டார். இந்த புகைப்படங்களை போட்டி நடத்தும் அமைப்பினர் வெளியிட்டு உள்ளனர் என கியோடோ நியூஸ் தெரிவித்து உள்ளது.

இதேபோன்று புதிய வீடியோ ஒன்றில், தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து உணவு விடுதி ஒன்றில் பெங்க் இரவு உணவை சாப்பிடுவது போன்ற காட்சிகளும் வெளிவந்துள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com