இனி ஒவ்வொரு போட்டியும் வாழ்வா? சாவா?... டேவிஸ் கோப்பையில் இந்தியாவுக்கு நெருக்கடி!

இன்று இரட்டையர் ஆட்டம் மற்றும் 2 மாற்று ஒற்றையர் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
டேவிஸ் கோப்பை
Published on

சியோல்,

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

2-வது ரவுண்ட்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இந்தியா- தென்கொரியா அணிகள் மோதும் ஆட்டம் தென்கொரியா தலைநகர் சியோலில் நேற்று தொடங்கியது.

தக்சினேஸ்வர் தோல்வி

முதல் நாளில் நடைபெற்ற முதல் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் தக்சினேஸ்வர் களம் இறங்கினார். உலக தரவரிசையில் 367-வது இடத்தில் இருக்கும் அவர், 157-வது இடத்தில் உள்ள தென்கொரிய வீரர் சூன்வூ குவோனை எதிர்கொண்டார்.

முதல் செட்டை தக்சினேஸ்வர் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி நல்ல தொடக்கம் கண்டார். ஆனால் அதன்பிறகு சூன்வூ குவோன் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை தன் பக்கம் திருப்பினார். 2 மணி நேரம் 5 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் சூன்வூ குவோன் 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் தக்சினேஸ்வரை வீழ்த்தினார்.

சுமித் நாகலும் தோல்வி

இதையடுத்து நடைபெற்ற 2-வது ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் சுமித் நாகல், தென்கொரியாவின் ஹையோன் சுங்கை எதிர்கொண்டார். முதல் செட்டை 2-6 என்ற கணக்கில் இழந்த சுமித் நாகல், 2-வது செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். ஆனால் வெற்றிக்கான கடைசி செட்டில் கடுமையாக போராடிய அவர், 5-7 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

இன்று 3 ஆட்டங்கள்

இன்று இரட்டையர் ஆட்டம் மற்றும் 2 மாற்று ஒற்றையர் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இறுதி சுற்றுக்கு முன்னேற இந்தியா, மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com