

வூஹான்,
லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டோபென்கோவை வீழ்த்தி பிரிட்டனின் சோனே கர்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டோபென்கோ - பிரிட்டனின் சோனே கர்தால் மோதினர்.
இதில் முதல் செட்டில் இருவரும் தலா 6 ஆட்டங்களை வென்றதால், வெற்றியைத் தீர்மானிக்க டைபிரேக்கர் நடைபெற்றது. இதில் 11-9 என்ற கணக்கில் வெற்றி பெற்ற கர்தால் முதல் செட்டை கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டிலும் இருவரும் சமபலத்துடன் விளையாடினர். மீண்டும் டைபிரேக்கர் வரை சென்ற இந்த செட்டில் 7-5 என்ற கணக்கில் வென்ற கர்தால், 7-6 (11-9), 7-6 (7-5) என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்டோபென்கோவை வீழ்த்தினார்.
இந்தத் தொடரில் கர்தால் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். முன்னாள் பிரெஞ்சு ஓபன் சாம்பியனான ஆஸ்டோபென்கோவை வீழ்த்துவதற்கு முன்பு, உலகத் தரவரிசையில் 6-வது இடத்தில் இருந்த எலினா ஸ்விடோலினா, முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் பெலிண்டா பென்சிக், விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஜாஸ்மின் பவுலினி ஆகியோரையும் அவர் தோற்கடித்துள்ளார்.
டென்னிஸ் தரவரிசையில் 170-வது இடத்தில் இருந்த சோனே கர்தால், இந்த தொடரில் தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதன் மூலம், டபிள்யூ.டி.ஏ. 1000 தொடர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மிகக் குறைந்த தரவரிசை வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
மேலும், தனது டென்னிஸ் வாழ்க்கையில் முதல்முறையாக டபிள்யூ.டி.ஏ. 1000 தொடரின் இறுதிப்போட்டிக்கும் அவர் முன்னேறியுள்ளார்.