பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்; பட்டம் வென்ற போலந்து வீராங்கனையின் சாதனை வரலாறு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற போலந்து வீராங்கனையின் சாதனை வரலாற்றை காண்போம்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்; பட்டம் வென்ற போலந்து வீராங்கனையின் சாதனை வரலாறு
Published on

பாரீஸ்,

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் பாரீஸ் நகரில் நடந்து வருகின்றன. கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட இந்த போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக் மற்றும் அமெரிக்காவின் சோபியா கெனின் ஆகிய வீராங்கனைகள் விளையாடினர்.

84 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் ஒரு செட்டை கூட இழக்காமல் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் கெனினை வீழ்த்தி 19 வயதுடைய இகா சாம்பியன் பட்டம் வென்று, கோப்பையை தன்வசப்படுத்தினார். 19 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான பரிசு தொகையையும் அவர் வென்றுள்ளார்.

இதனால் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற போலந்து நாட்டின் முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்று இகா வரலாறு படைத்துள்ளார். இந்த இறுதி போட்டியில் பெற்ற வெற்றியால், நாளை வெளியிடப்பட உள்ள புதிய தரவரிசை பட்டியலில் இதுவரை இருந்த 54வது இடத்தில் இருந்து 40 இடங்கள் முன்னேறி 17வது இடத்தில் இகா இடம்பெற இருக்கிறார்.

இதுதவிர இந்த நூற்றாண்டில் பிறந்து கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் வீராங்கனை, மிக குறைந்த தரவரிசை (54) கொண்ட இடத்தில் இருந்து பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்ற முதல் வீராங்கனை ஆகிய சாதனைகளையும் அவர் படைத்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற தோமஸ் என்பவருக்கு மகளாக போலந்து நாட்டின் வார்சா நகரில் பிறந்தவர் இகா. கடந்த 1997ம் ஆண்டு இவா மஜோலி வெற்றி பெற்றதற்கு பிறகு 23 வருடங்கள் கழித்து பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்ற முதல் டீன் ஏஜ் வயது வீராங்கனை என்ற சாதனையையும் இகா நிகழ்த்தியுள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டு ஒரு செட் கூட இழக்காமல் போட்டியை வென்ற ஜஸ்டின் ஹெனின் செய்த சாதனையை இகா முதன்முறையாக முறியடித்துள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு ரபேல் நடால் பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்றதற்கு பின்னர் மிக இளம் வயதுடைய சாம்பியன் பட்டம் பெற்ற வீராங்கனை பெருமையை இகா பெற்றுள்ளார்.

இதேபோன்று, கடந்த 1992ம் ஆண்டு மோனிகா செலஸ் பட்டம் வென்ற இளம் வீராங்கனை என்ற சாதனையை ஏற்படுத்தியற்கு பின்னர், தற்பொழுது இகா இந்த சாதனையை படைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com