

இந்தியன் வெல்ஸ்,
டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா, லிண்டா நோஸ்கோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதனால் மற்றொரு அமெரிக்க வீராங்கனையான கோகோ காப், தனது கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றும் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் நடைபெற்ற குரூப் 1 பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான ஜெசிகா பெகுலா, 8-ம் நிலை வீராங்கனையான லிண்டா நோஸ்கோவாவை எதிர்கொண்டார்.
முதல் செட்டில் இருவரும் கடுமையாகப் போராடினர். இறுதியில் டைபிரேக்கரில் 7-2 என்ற கணக்கில் வென்ற பெகுலா, முதல் செட்டை 7-6 எனக் கைப்பற்றினார். 2-வது செட்டில் நோஸ்கோவா 6-4 என வெற்றி பெற்றார்.
இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட்டை போராடி 7-5 என கைப்பற்றினார். இறுதியில் 7-6 (2), 4-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பெகுலா அரையிறுதிக்கு முன்னேறினார்.
முன்னதாக நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப், உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக்கை 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.
2-வது செட்டில் ஒரு கட்டத்தில் 1-5 என பின்தங்கியிருந்த காப், அதன் பிறகு தொடர்ந்து 6 கேம்களைக் கைப்பற்றி அந்த செட்டையும் வென்றார். இருப்பினும், இந்த வெற்றி அவருக்கு அரையிறுதி வாய்ப்பைப் பெற்றுத் தரவில்லை.
குரூப் 1 பிரிவில் நோஸ்கோவா, பெகுலா, காப் ஆகிய மூவரும் தலா 2 வெற்றிகள், ஒரு தோல்வியுடன் சமநிலையில் இருந்தனர். ஆனால், செட் கணக்கின் அடிப்படையில் நோஸ்கோவா முதலிடத்தையும், பெகுலா 2-வது இடத்தையும் பிடித்தனர். காப் 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டதால் அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.
இந்த வெற்றியின் மூலம் பெகுலா அரையிறுதியில் ரஷ்யாவின் இளம் வீராங்கனையான மிர்ரா ஆண்ட்ரீவாவை எதிர்கொள்ள உள்ளார்.
மற்றொரு அரையிறுதியில் நோஸ்கோவாவை எதிர்கொள்ளப் போவது யார் என்பது குரூப் 2-ல் நடைபெறும் அரினா சபலென்கா - எலினா ஸ்விடோலினா இடையிலான ஆட்டத்தின் முடிவில் தெரியவரும்.