வரலாற்று சாதனைக்கு இன்னும் ஒரே அடி: ஆண்டு இறுதியில் முதலிடத்தை தக்கவைப்பாரா ரைபகினா?

தற்போது டோக்கியோவில் நடைபெறும் பான் பசிபிக் ஓபன் தொடரில் ரைபகினா களமிறங்கியுள்ளார்.
ரைபகினா
Published on: 

டோக்கியோ,

கஜகஸ்தான் டென்னிஸ் வீராங்கனை எலினா ரைபகினா, இந்த ஆண்டின் இறுதியில் உலகத் தரவரிசையில் முதலிடத்தை தக்கவைக்கும் முனைப்பில் உள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன்

மாஸ்கோவில் பிறந்த 27 வயதான ரைபகினா, கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். தொடர்ந்து அமெரிக்க ஓபன் பட்டத்தையும் கைப்பற்றியதன் மூலம், அவரது கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு விம்பிள்டன் பட்டத்தை வென்றிருந்தார்.

காயத்திலிருந்து மீண்டு வந்த ரைபகினா

அமெரிக்க ஓபன் தொடருக்குப் பிறகு சீனா ஓபனில் களமிறங்கிய ரைபகினா, இரண்டாவது சுற்றில் உலகத் தரவரிசையில் 118-வது இடத்தில் இருந்த அலினா சரேவாவிடம் தோல்வியடைந்தார். பின்னர், பாதத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக வுகான் ஓபன் தொடரில் பங்கேற்கவில்லை.

அதன்பிறகு நிங்போ ஓபன் தொடரில் பங்கேற்ற அவர், இறுதிப்போட்டியில் கனடா வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸை 6–2, 6–2 என்ற நேர் செட்களில் வீழ்த்திப் பட்டம் வென்றார். இது நடப்பு ஆண்டில் அவர் கைப்பற்றிய நான்காவது பட்டமாகும்.

மேலும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள டபிள்யூ.டி.ஏ. இறுதிப்போட்டித் தொடரிலும் பங்கேற்க அவர் தகுதி பெற்றுள்ளார்.

ஆண்டு இறுதி முதலிடம்

தற்போது டோக்கியோவில் நடைபெறும் பான் பசிபிக் ஓபன் தொடரில் ரைபகினா களமிறங்கியுள்ளார். இந்த தொடரில் அடுத்த சுற்றில் யூலியா புதின்சேவா அல்லது மரியா சக்காரி ஆகியோரில் ஒருவரை அவர் எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

இந்த தொடரில் கிடைக்கும் முடிவுகளை பொறுத்து, ஆண்டு இறுதியில் உலகத் தரவரிசையில் முதலிடத்தை உறுதிசெய்யும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கலாம். அவ்வாறு டோக்கியோவில் முதலிடத்தை உறுதிசெய்ய முடியாவிட்டாலும், டபிள்யூ.டி.ஏ. இறுதிப்போட்டி தொடரில் அதற்கான வாய்ப்பு அவருக்கு இருக்கும்.

இதுகுறித்து ரைபகினா கூறுகையில், “முடிந்தவரை விரைவாக முதலிடத்தை உறுதிசெய்வது சிறப்பானது. இறுதிப்போட்டி தொடருக்கு தயாராகும் வகையில் சில போட்டிகளில் விளையாடுவது எனக்கு முக்கியம். இங்கேயே முதலிடத்தை உறுதிசெய்தால் மகிழ்ச்சி. இல்லையென்றாலும், இறுதிப்போட்டி தொடரில் மற்றொரு வாய்ப்பு கிடைக்கும்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com