டபிள்யூ.டி.ஏ. இறுதிப்போட்டி - ரஷ்ய வீராங்கனையுடன் கைகுலுக்க மறுத்த உக்ரைன் நட்சத்திரம்

உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, ரஷ்யாவின் 19 வயது இளம் வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவாவை எதிர்கொண்டார்.
மிர்ரா ஆண்ட்ரீவா, எலினா ஸ்விடோலினா
Published on: 

இந்தியன் வெல்ஸ்,

டபிள்யூ.டி.ஏ. இறுதிப் போட்டி டென்னிஸ் தொடரில் ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவாவிடம் தோல்வியடைந்த உக்ரைன் நட்சத்திரம் எலினா ஸ்விடோலினா, போட்டி முடிந்ததும் அவருடன் கைகுலுக்க மறுத்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

ஆண்ட்ரீவா அபார வெற்றி

அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் டபிள்யூ.டி.ஏ. இறுதிப் போட்டித் தொடரின் லீக் சுற்றில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, ரஷ்யாவின் 19 வயது இளம் வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவாவை எதிர்கொண்டார்.

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஆண்ட்ரீவா, முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றினார். தொடர்ந்து 2-வது செட்டில் ஸ்விடோலினாவுக்கு ஒரு கேம்கூட விட்டுக்கொடுக்காமல் 6-0 என வெற்றி பெற்றார்.

வெறும் 70 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்த ஆண்ட்ரீவா, 6-4, 6-0 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தார்.

கைகுலுக்க மறுத்த ஸ்விடோலினா!

போட்டி முடிந்ததும் ஸ்விடோலினா நேராக நடுவர் இருக்கைக்கு சென்று அவரிடம் கைக்குலுக்கினார். ஆண்ட்ரீவாவிடம் கைக்குலுக்க மறுத்தார். அதேபோல், ஆண்ட்ரீவாவும் அவருடன் கைகுலுக்க முன்வரவில்லை.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகளுடன் போட்டி முடிந்ததும் கைகுலுக்குவதில்லை என்ற நிலைப்பாட்டை ஸ்விடோலினா தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்.

மிர்ரா ஆண்ட்ரீவா

ரஷ்ய வீராங்கனைகள் தங்கள் நாட்டின் கொடியின் கீழ் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க கட்டுப்பாடுகள் உள்ளதால், மிர்ரா ஆண்ட்ரீவா உள்ளிட்ட வீராங்கனைகள் நடுநிலை வீராங்கனைகளாகப் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.

இந்தச் சூழலில், ஸ்விடோலினா - ஆண்ட்ரீவா இடையிலான போட்டிக்குப் பிறகும் கைகுலுக்கல் நடைபெறாதது மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

X