அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் அல்கராஸ்


தினத்தந்தி 8 Sept 2025 3:36 AM IST (Updated: 8 Sept 2025 3:46 AM IST)
t-max-icont-min-icon

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று நள்ளிரவு நடைபெற்றது.

நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம்நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் , ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அல்காரஸ் 6-4, 7(7)-6(4) ,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் .மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பெலிக்ஸ் ஆகரை வீழ்த்தி ஜானிக் சின்னர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இந்நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று நள்ளிரவு அரங்கேறியது. இதில் நடப்பு சாம்பியன் ஜானிக் சினெர், கார்லஸ் அல்காரசுடன் பலப்பரீட்சை நடத்தினார். இந்த ஆண்டில் கிராண்ட்ஸ்லாம் இறுதி சுற்றில் இருவரும் சந்திப்பது இது 3-வது முறையாகும்.

முந்தைய இரு மோதல்களில் ஜூன் மாதம் நடந்த பிரெஞ்சு ஓபனில் அல்காரசும், ஜூலை மாதம் நடந்த விம்பிள்டனில் ஜானிக் சினெரும் வெற்றி பெற்றிருந்தனர். இதுவரை இருவரும் 14 முறை நேருக்கு நேர் மோதி இருந்தனர். இதில் அல்காரஸ் 9-5 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வந்தார். 2004 முதல் 2008-ம் ஆண்டு வரை சுவிட்சர்லாந்து முன்னாள் ஜாம்பவான் ரோஜர் பெடரர் அமெரிக்க ஓபன் பட்டத்தை 5 முறை தொடர்ச்சியாக வென்று இருந்தார். அதன் பிறகு யாரும் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை தக்கவைத்ததில்லை.

இந்நிலையில் இன்று பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 6-2, 3-6, 6-1, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் ஜானிக் சின்னரை வீழ்த்தி, கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அவருக்கு ரூ.43½ கோடியும், 2-வது இடம் பெற்ற ஜானிக் சினெருக்கு ரூ.21¾ கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.

1 More update

Next Story