

லண்டன்,
டென்னிஸின் மூன்று பிரிவுகளிலும் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்களின் பட்டியலில் ஆஸ்டாபென்கோ இடம்பிடித்துள்ளார்.
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில், ஆஸ்டாபென்கோ - அரேவலோ ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஸ்டார்ம் ஹண்டர் மற்றும் மார்க் போல்மன்ஸ் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்த அந்த ஜோடி, அதன்பிறகு சிறப்பாக மீண்டு வந்து அடுத்த இரு செட்களையும் 7-5, 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி, 4-6, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் திரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
ஜெலினா ஆஸ்டாபென்கோவுக்கு இது முதல் விம்பிள்டன் பட்டமாகும். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு விம்பிள்டன் கலப்பு இரட்டையர் இறுதிப்போட்டியிலும், 2025-ம் ஆண்டு மகளிர் இரட்டையர் இறுதிப்போட்டியிலும் தோல்வியடைந்து ரன்னர்-அப் பட்டத்துடன் வெளியேறியிருந்தார்.
இந்த முறை அந்த ஏமாற்றங்களை தாண்டி விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம், டென்னிஸின் மூன்று பிரிவுகளிலும் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்களின் எலைட் லிஸ்ட்டில் ஆஸ்டாபென்கோ இடம்பிடித்துள்ளார்.
ஒற்றையர் (Singles): 2017 பிரெஞ்சு ஓபன் சாம்பியன்
மகளிர் இரட்டையர் (Women's Doubles): 2024 யுஎஸ் ஓபன் சாம்பியன்
கலப்பு இரட்டையர் (Mixed Doubles): 2026 விம்பிள்டன் சாம்பியன்