

உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் 55-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் உள்ள இண்டியன்வெல்ஸ் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் தொடர்ந்து 3-வது முறையாக நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ஈரான் போர் காரணமாக சவுதி அரேபியாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் பாதுகாப்பு கருதி அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டது.
கிராண்ட்ஸ்லாமுக்கு அடுத்தபடியாக கவுரமிக்க போட்டியான இதில் ஒற்றையர் பிரிவில் கலந்து கொள்ளும் 8 வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதன்படி குரூப் 1-ல் நடப்பு சாம்பியனும், 'நம்பர் ஒன்' வீராங்கனையுமான எலினா ரைபகினா (கஜகஸ்தான்). தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் கோகோ காப் (அமெரிக்கா), 5-வது இடத்தில் உள்ள ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), விம்பிள்டன் சாம்பியனும், 8-வது இடத்தில் உள்ளவருமான லிண்டா நோஸ்கோவா (செக்குடியரசு) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
குரூப் 2-ல் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அரினா சபலென்கா (பெலாரஸ்), பிரெஞ்சு ஓபன் சாம்பியனும். 3-வது இடத்தில் உள்ளவருமான மிரா ஆன்ட்ரீவா (ரஷியா), 6-வது இடம் வகிக்கும் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்). 7-வது இடத்தில் உள்ள கரோலினா முச்சோவா (செக்குடியரசு) ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.
இதில் ஒவ்வொரு வீராங்கனையும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீராங்கனைகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள்.