கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி

நெல்லிக்குப்பம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலியானார்.
கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிவேகத்தில் உயர்ந்து வருகிறது. இதில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தடுப்பு பணியில் முன்கள பணியாளர்களாக பணிபுரிந்து வருபவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த 10 நாட்களில் மட்டும் 6 டாக்டர்கள், 16 போலீஸ்காரர்கள் உள்பட 3 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:-

கடலூர் வில்வநகர் பகவதியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 52). இவர் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2-ந்தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அன்று முதல் நடராஜன் விடுப்பில் இருந்து வந்தார். இதற்கிடையே அவர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து இவர் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் மேல்சிகிச்சைக்காக சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை 9.30 மணி அளவில் நடராஜன் பரிதாபமாக இறந்தார். அவரின் மறைவு சக போலீசாரிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com