விடுமுறை தினம்: திருத்தணி முருகன் கோவிலில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்

திருத்தணி முருகன் கோவிலில் பொது தரிசன வரிசையில் நின்றிருந்த பக்தர்கள் தரிசனம் செய்ய மூன்று மணி நேரம் வரை ஆனது.
விடுமுறை தினம்: திருத்தணி முருகன் கோவிலில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்
Published on

திருத்தணி மலையில் அமைந்துள்ள முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். விடுமுறை நாட்களில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.

இந்த நிலையில் நேற்று அரசு விடுமுறை மற்றும் யுகாதி என்பதால் காலை முதலே ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சுற்றுலா பஸ்கள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் அதிக அளவில் மலைக்கோவிலுக்கு சென்றதால் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனையடுத்து போலீசார் அனைத்து வாகனங்களையும் கோர்ட்டுக்கு பின்புறம் நிறுத்த அறிவுறுத்தினர். பின்னர் பக்தர்கள் அனைவரும் கோவில் பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று வந்தனர். இதனால் பொதுவழியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் கொளுத்தும் வெயிலில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசித்தனர்.

அதே போல் ரூ.100 தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசித்தனர். முன்னதாக அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com