புற்றுநோயை போராடி வென்ற மாரத்தான் வீராங்கனை பிராச்சி குல்கர்னி


புற்றுநோயை போராடி வென்ற மாரத்தான் வீராங்கனை பிராச்சி குல்கர்னி
x

சுறுசுறுப்புடன் அன்றாட செயல்பாடுகளை மேற்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். நோய் பாதிப்பில் இருந்து விரைவில் மீள்வதற்கான வழிமுறைகளை பின்பற்ற தூண்டிவிடும் என்று நம்பிக்கையோடு சொல்கிறார், பிராச்சி குல்கர்னி.

''புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் மன தைரியத்தையும், உடல் வலிமையையும் இழக்கும்போது விரைவாகவே பலவீனமடைந்துவிடுவார்கள். நோய் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் அவர்களின் வாழ்க்கையே பெரும் போராட்டமாகி விடும். அதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. சுறுசுறுப்புடன் அன்றாட செயல்பாடுகளை மேற்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். அதுவே அரு மருந்தாக செயல்பட்டு நமக்குள் நம்பிக்கையை விதைக்கும். நோய் பாதிப்பில் இருந்து விரைவில் மீள்வதற்கான வழிமுறைகளை பின்பற்ற தூண்டிவிடும்'' என்று நம்பிக்கையோடு சொல்கிறார், பிராச்சி குல்கர்னி.

36 வயதாகும் இவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர். தற்போது பணி நிமித்தமாக துபாயில் வசித்து வருகிறார். மாரத்தான் வீராங்கனை, சமையல் கலைஞர், ஓவியர் என பன்முகம் கொண்டவர். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் உற்சாகமாக இயங்கிக்கொண்டிருந்தவரை புற்றுநோய் முடக்கிப்போட்டுவிட்டது.ஆனாலும் துவண்டு போகாமல் தனது வழக்கமான செயல்பாடுகளை கஷ்டப்பட்டு மேற்கொண்டு வந்திருக்கிறார். கடும் போராட்டத்திற்கு பிறகு புற்றுநோயில் இருந்து முழுமையாக மீண்டு வந்து, தன்னை போன்ற நோய் பாதிப்புக்குள்ளாகி இருப்பவர்களுக்கு ரோல் மாடலாக விளங்கிக்கொண்டிருக்கிறார். தனது புற்றுநோய் போராட்ட வாழ்க்கையை பிராச்சி குல்கர்னியே கூற கேட்போம்.

''சமையல் கலைஞர் என்ற குறுகிய வட்டத்துக்குள் பயணிப்பதில் எனக்கு விருப்பமில்லை. ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கி அடி எடுத்து வைக்க விரும்பினேன். அதற்கான ஆயுதம் உடற்பயிற்சி என்பதை புரிந்து கொண்டு 2019-ம் ஆண்டு முதல் அதனை மேற்கொள்ள தொடங்கினேன். பயணம் செய்வது எனக்கு பிடிக்கும். காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல விரும்பினேன். அங்கு மலையேற்றம் மேற்கொள்வதற்கு ஆசைப்பட்டேன்.

ஆனால் மலையேற்றம் செய்வதற்கு போதுமான உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று எனது பயிற்சியாளர் கூறினார். அதற்காக 6 மாதங்கள் கடுமையான உடற்பயிற்சிகளை செய்தேன். ஓட்டப்பயிற்சி செய்து ஸ்டெமினாவை அதிகப்படுத்தினேன். ஓட்டம் எனக்கு ரொம்பவே பிடித்து போனது. மாரத்தானில் பங்கேற்கவும் செய்தது. 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் புனேவில் நடந்த 21 கி.மீ. தூரம் கொண்ட அரை மாரத்தான் போட்டியில் பங்கேற்றேன்'' என்கிறார்.

இதற்கிடையே பிராச்சி குல்கர்னி பணி நிமித்தமாக துபாய்க்கு இடம் பெயர்ந்திருக்கிறார். அங்கும் உடற்பயிற்சி மீதான ஆர்வம் உயிர்ப்புடன் இருக்கவே, தொடர்ந்து ஓட்டப்பயிற்சியை மேற்கொண்டார். 2021-ம் ஆண்டில் 7 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றும் அசத்தி இருக்கிறார். 8-வது மாரத்தான் போட்டியில் பங்கேற்பதற்கு பயிற்சி பெற்றபோது எதிர்பாராதவிதமாக சாலையில் தவறி விழுந்து காயம் அடைந்திருக்கிறார்.

அதற்காக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டபோது முழு உடல் பரிசோதனை மேற்கொள்வதற்கு முடிவு செய்திருக்கிறார். எந்த உடல் நல பிரச்சினையும் இருக்காது என்று எதிர்பார்த்தவருக்கு மார்பகத்தில் கட்டி இருப்பது பரிசோதனையில் தெரியவந்து அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

''ஆரம்பத்தில் அந்த கட்டியை சாதாரணமானது என்றுதான் கருதினேன். 2021-ம் ஆண்டு கட்டியை அகற்றுவதற்கு அறுவை சிகிச்சை செய்தேன். அதோடு அந்த பிரச்சினை முடிந்துவிடும் என்று நினைத்தேன். ஆனால் அது வீரியமிக்கது என்று கண்டறியப்பட்டது.அடுத்த சில மாதங்களில் மேமோகிராம், சி.டி.ஸ்கேன், கீமோதெரபி போன்ற வார்த்தைகளை அடிக்கடி உச்சரிக்க வேண்டியதாயிற்று. எனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ஏனெனில் ஆரோக்கியமாகவே இருந்தேன். உடற்பயிற்சி, மாரத்தான் என உடலை கட்டுக்கோப்பாகவும் வைத்திருந்தேன்'' என்கிறார்.

கீமோதெரபி சிகிச்சை பிராச்சியின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போட்டு விட்டது. அவை ஏற்படுத்திய பக்க விளைவுகள் கடுமையாக இருந்தன. சமையல் கலைஞராக 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டி இருந்தது. பெரும்பாலும் நின்று கொண்டேதான் சமையல் வேலைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் அவரால் முன்புபோல் நிற்கமுடியவில்லை. சுறுசுறுப்பாக செயல்படமுடியவில்லை. கீமோதெரபி சிகிச்சை அவரது உடலை பலவீனப்படுத்திவிட்டது. மலச்சிக்கல் பிரச்சினையையும் எதிர்கொண்டிருக்கிறார்.

''மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு என வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் சிரமப்பட்டேன். மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபோது மூல நோய் இருப்பது தெரியவந்தது. என்னால் உட்காரவோ நடக்கவோ முடியவில்லை. நாக்கு பகுதியில் வெடிப்பு ஏற்பட்டு புண்கள் உண்டானது. என்னால் எதையும் விழுங்கவோ, பேசவோ முடியவில்லை.

இந்த அவதிக்கு மத்தியில் கீமோ தெரபி சிகிச்சையை 16 முறை மேற்கொள்ள வேண்டும் என்றார்கள். அதனால் மனதொடிந்து போனேன். ஒருபோதும் நோய் நம்மை வென்றுவிடக்கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன். அந்த சமயத்தில் எனக்கு நம்பிக்கை கொடுத்தது உடற்பயிற்சிதான். ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்ததால் கீமோதெரபி சிகிச்சையின்போது மாரத்தானை மனதில் நிறுத்தினேன்.

ஓடும்போது சுற்றுப்புறங்களின் மீது கவனத்தை திருப்ப மாட்டீர்கள். இன்னும் எவ்வளவு தூரம் ஓட வேண்டும்? இலக்கு இன்னும் எவ்வளவு அருகில் இருக்கிறது? என்ற சிந்தனையே மேலோங்கும். கீமோதெரபிக்கும் இந்த அணுகுமுறையை பின்பற்ற முடிவு செய்தேன். வீட்டுக்குள்ளேயே படுத்த படுக்கையாக கிடப்பதற்கு பதிலாக, குறுகிய நடைப்பயணத்தை தொடங்கினேன். அது ஓட்டமாக மாறும் ஆற்றலை கொடுத்தது'' என்று நம்பிக்கையோடு சொல்கிறார்.

புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த சமயத்தில் அவரது மரபணுவில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். பொதுவாக பி.ஆர்.சி.ஏ.2 என்ற மரபணு காரணமாக இளம் பெண்களுக்கு பரம்பரை ரீதியாக மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் மீண்டும் புற்றுநோய் வரும் அபாயத்தை குறைக்கும் நோக்கத்தில் பிராச்சிக்கு மற்றொரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

கடைசி கீமோதெரபி சிகிச்சையை நினைவு கூரும்விதமாக மருத்துவமனை செவிலியர்களுடன் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். புற்றுநோய் பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு வந்தவருக்கு கொரோனாவும் அச்சுறுத்தி இருக்கிறது. இரண்டு பாதிப்புகளில் இருந்தும் மீண்டு தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டார்.

''அந்த காலகட்டம் கடினமாக இருந்தது. என்னை மிகவும் பயமுறுத்திய விஷயம் என்னவென்றால், கீமோதெரபி சிகிச்சை என் சுவை உணர்வை இழக்கச் செய்தது. எதை சாப்பிட்டாலும் அவை மருந்து போலவே தோன்றியது. என்னால் சமைக்க முடியுமா? ருசியாக சாப்பிட முடியுமா என்று கவலைப்பட்டேன்.

சமையல் கலைஞராக இருந்தாலும் என்னால் முன்பு போல் ருசிக்க முடியாது என்று கணவரிடம் வருத்தத்தோடு சொன்னபோது, அவர் 'பிரபல இசையமைப்பாளரும், பியானோ கலைஞருமான பீத்தோவன் காது கேளாதவர் என்பது உனக்கு நினைவிருக்கிறதா?' என்றார். அவர் கொடுத்த ஊக்கமும், உடற்பயிற்சியும் என்னை இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வைத்திருக்கிறது'' என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார், பிராச்சி.

புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் ஒருபோதும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது என்றும் வேண்டுகோள் வைக்கிறார். எனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ஏனெனில் ஆரோக்கியமாகவே இருந்தேன். உடற்பயிற்சி, மாரத்தான் என உடலை கட்டுக்கோப்பாகவும் வைத்திருந்தேன்


Next Story