ஒலிம்பிக் இலக்கை விரட்டும் மஞ்சுராணி..!

வறுமையிலும் குத்து சண்டையில் சாதித்த மஞ்சு ராணி
ஒலிம்பிக் இலக்கை விரட்டும் மஞ்சுராணி..!
Published on

அரியானாவில் சிறு கிராமம் ஒன்றில் பிறந்த மஞ்சுராணி, சிறுவயது முதலே இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் மற்றும் விஜேந்திர சிங் பங்கேற்கும் போட்டிகளை பார்த்து ரசித்ததோடு வருங்காலத்தில் தானும் குத்துச்சண்டை வீராங்கனையாக வேண்டுமென்ற கனவையும் வளர்த்துக் கொண்டார். ஆனால் அவரது ஆசை கனவுக்கு குடும்ப பொருளாதாரம் தடையாக இருந்தது. பயிற்சி அளிப் பதற்கும் அவரது கிராமத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளர் யாரும் இல்லை. ஆனாலும் தனது கனவை விட்டு விட அவர் விரும்பவில்லை.

2010-ம் ஆண்டில் புற்றுநோய் பாதிப்பால் இவரது தந்தை இறந்து விடவே, அவரது குடும்பத்தில் இருந்த எட்டு உறுப்பினர்களை காப்பாற்ற குடும்ப வருமானம் போதுமானதாக இல்லை. அதனால் வேறு வழியில்லாமல் தன்னுடைய ஆசை கனவை விட்டுவிட மஞ்சுராணி முடிவு செய்தார். அதற்கு அவரது அம்மா சம்மதிக்கவில்லை. மகளுக்கு பக்கபலமாக நின்றார். உள்ளூர் பயிற்சியாளர் ஒருவரும் மஞ்சுராணிக்கு பயிற்சியளிக்க முன் வந்தார்.

கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கபடி உள்பட அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சியளித்து வந்த அவரிடம் குத்துச் சண்டையையும், தற்காப்புக் கலையையும் கற்றுக் கொள்ளத் தொடங்கினார் மஞ்சுராணி. இதுவே அவரது குத்துச்சண்டை வீராங்கனையாகும் கனவுக்கு திறவுகோலாக அமைந்தது. ஆனால் அவரது முயற்சி நிறைவேறுவது அத்தனை சுலபமாக இல்லை. சாகேப் சிங் நார்வால் என்ற பயிற்சியாளர் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லவ்லி புரபஷனல் பல்கலைக்கழகத்தில், விளையாட்டுத் துறை ஒதுக்கீட்டில் முழு உதவித் தொகையுடன் சேரும் வாய்ப்பைப் பெற்றார்.

அங்கு மற்ற மாணவர்களுடன் சேர்ந்து சுமன் பீரித்கவுர் என்ற பயிற்சியாளர் உதவியுடன் குத்துச்சண்டையில் அடிப்படை பயிற்சிகளில் தேர்ச்சி பெற்று அரியானா சார்பில் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். ஆனால் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காததால், பஞ்சாப் சார்பில் போட்டிகளில் பங்கேற்க தொடங்கி இருக்கிறார். அதன் பிறகு நிறைய வாய்ப்புகள் தேடி வரத் தொடங்கின. உடனிருந்தவர்கள் கொடுத்த ஆதரவு இவருக்கு ஊக்கத்தை அளித்தது.

தற்போது 23 வயதாகும் மஞ்சுராணி ஏற்கனவே 2019-ம் ஆண்டு அனைத்திந்திய பாக்சிங் அசோசியேஷன் மூலம் மகளிர் சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கமும் வென்றிருக்கிறார். அதே ஆண்டு பல்கேரியாவில் நடந்த ஸ்ட்ராண்ட்ஜா மெமோரியல் பாக்சிங் போட்டியிலும் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்நிலையில், 2022-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டிகளில் மஞ்சுராணியால் பங்கேற்க முடியாமல் போனது. அந்த வருத்தம் அவரை விட்டு விலகுவதற்குள்ளாகவே, இந்த வருடம் நடக்க இருக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார். இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும், ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்கும் வாய்ப்பும் பறிபோனது. ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாக, மூன்று முக்கிய போட்டிகளை தவறவிட்ட நிலையிலும், இவர் ஓய்ந்தபாடில்லை. தொடர்ச்சியாக பயிற்சி பெறுகிறார்.

''மூன்றும், முத்தான வாய்ப்புகள். அதில் பங்கேற்க தகுதி பெறாததை நினைத்து நான் ஒரு நாளும் வருத்தப்பட்டதில்லை. ஏனெனில் வருத்தம், எதையும் மாற்றிவிடாது. தொடர் பயிற்சிகள்தான், நம்முடைய இலக்கை எட்டிப்பிடிக்க வழிவகுக்கும். நம்மை உற்சாகமூட்டும்'' என்பவர், 2028 ஒலிம்பிக் போட்டிகளுக்காக தன்னை தயார் படுத்தி வருகிறார். அதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 35 கிலோமீட்டர் தொடர் ஓட்டத்தை, 3 மணிநேரத்திற்குள்ளாக ஓடி முடித்து புது சாதனை படைத்தார்.

''ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வது, என்னுடைய கனவு. அது இந்த முறை (2024 ஒலிம்பிக்ஸ்) நிகழ சாத்தியமில்லை. இருப்பினும் ஒலிம்பிக் பதக்கத்திற்கான கனவும், ஆசையும் அப்படியே இருக்கிறது. அந்த இலக்கை வெகு விரைவாகவே எட்டிவிடுவேன்'' என்று தன்னம்பிக்கையுடன் சொல்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com