கரூர் மாவட்டத்தில் நேற்று புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன
கரூர்
புதிய கட்டுப்பாடுகள்
இந்தியா முழுவதும் கொரோனாவின் 2-வது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
அதன் ஒரு கட்டமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஏற்கனவே சினிமா தியேட்டர்கள், 3 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கடைகள், நகர்ப்பகுதியில் சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளாக மே 6-ந்தேதி முதல் வருகிற 20-ந்தேதி வரை மளிகை, காய்கறிக் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தமிழக அரசு தடை விதித்திருந்தது.
கடைகள் திறப்பு
மேலும் மருந்தகங்கள், பால் வினியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல எந்தத் தடையுமின்றி செயல்படும் என்றும், மீன், இறைச்சி கடைகளில் காலை 4 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்கவேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. கரூர் ஜவகர் பஜார், கோவைரோடு, வெங்கமேடு, தாந்தோணிமலை உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மளிகை, காய்கறி கடைகள் அரசின் உத்தரவின் படி காலை முதல் மதியம் 12 மணி வரை திறந்திருந்தன. பிறகு அனைத்தும் மூடப்பட்டன.
குறைவான பயணிகள்
மேலும், சலூன் கடைகள், அழகு நிலையங்கள் நேற்று திறக்கப்படவில்லை. ஓட்டல்கள், டீக்கடைகளில் பார்சல் மட்டுமே வழங்கப்பட்டன. மேலும் டீக்கடைகள் மதியம் 12 மணிக்கு பிறகு அடைக்கப்பட்டது. அம்மா உணவகங்கள் வழக்கம் போல் இயங்கியது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் 50 சதவீத பயணிகளுடன் இயக்கப்பட்டது. இருப்பினும் குறைவான பயணிகளே அதில் பயணம் செய்தனர். இதனால் ஒரு சில பஸ்களில் 10-க்கும் குறைவான பயணிகளே இருந்தனர்.
டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதல்
அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கியது. இரவு நேர ஊரடங்கால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள், தற்போது புதிய கட்டுப்பாடுகளால் காலை 8 மணிக்கு திறக்கப்பட்டன. இதனால் காலையிலேயே டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது.
பிறகு மதியம் 12 மணிக்கு அடைக்கப்பட்டது. இதனால் கரூர் மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் நேற்று உடனடியாக அமலுக்கு வந்தது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் முடங்கினர்.

