தமிழக முதல்–அமைச்சருடன் சித்தராமையா பேசுவார் மந்திரி எம்.பி.பட்டீல் பேட்டி

மேகதாதுவில் புதிய அணை கட்டுவது குறித்து தமிழக முதல்–அமைச்சருடன் சித்தராமையா பேசுவார் என்று மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.
தமிழக முதல்–அமைச்சருடன் சித்தராமையா பேசுவார் மந்திரி எம்.பி.பட்டீல் பேட்டி
Published on

பெங்களூரு,

கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பெங்களூரு நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் நோக்கத்தில் மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தால் தமிழகத்திற்கும் அனுகூலம் உண்டாகும். இதுகுறித்து முதல்மந்திரி சித்தராமையா, தமிழக முதல்அமைச்சருடன் பேசுவார். அந்த மாநிலத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் நாங்கள் இறங்குவோம். இந்த திட்டம் பற்றி தமிழ்நாட்டு மக்கள் தவறாக புரிந்து கொண்டு இருப்பதால் இதற்கு அந்த மாநிலம் குறுக்கீடு செய்கிறது.

இந்த திட்டத்தில் தமிழகத்திற்கு உள்ள சந்தேகங்களை சரிசெய்ய நாங்கள் முயற்சி செய்வோம். இந்த புதிய அணை கட்டுவதன் மூலம் இடர்ப்பாட்டு காலங்களில் தமிழகத்திற்கு தண்ணீர் விட முடியும். இந்த திட்டம் பற்றி காவிரி மேற்பார்வை குழுவிடம் முழு தகவல்களை எடுத்து கூறியுள்ளோம். தற்போது பெங்களூருவில் சில பகுதிகளுக்கு மட்டுமே காவிரி நீர் கிடைக்கிறது. இந்த அணை கட்டப்பட்டால் ஒட்டுமொத்த பெங்களூருவுக்கும் காவிரி நீர் விநியோகம் செய்ய முடியும்.

புதிய அணை கட்டுவதற்கு தனியார் நிலம் தேவை இல்லை. அரசு மற்றும் வனத்துறைக்கு சொந்தமான நிலம் போதுமானதாக உள்ளது. இதனால் இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் எந்த குறுக்கீடும் இருக்காது. இந்த அணை குடிநீர் நோக்கத்திற்காக கட்டப்படுவதால் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையும் ஒப்புதல் வழங்கும்.

இந்த திட்டத்திற்கு தேவையான நிதியை பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத்திடம் இருந்து பெறப்படும். அங்கு மின் உற்பத்தி திட்டமும் அமல்படுத்தப்படுவதால் மின்துறையிடம் இருந்தும் நிதி பெறப்படும். இந்த திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்த பிறகு பணிகள் தொடங்கப்படும். 3 அல்லது 4 ஆண்டுகளில் அணை கட்டும் பணிகள் முடிக்கப்படும்.

இந்த திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட்டில் அனுமதி பெற வேண்டுமா? அல்லது அங்கு தகவல் தெரிவிக்க வேண்டுமா? என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். 30 ஆண்டு காலமாக இந்த திட்டத்தை அமல்படுத்த கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த முறை எத்தனை தடைகள் வந்தாலும் இந்த அணையை கட்டியே தீருவோம். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். ஒருவேளை தமிழக அரசு இதை எதிர்த்தால் அதையும் நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

இவ்வாறு எம்.பி.பட்டீல் கூறினார்.

மேகதாதுவில் அணை கட்டினால் நூற்றாண்டு வரலாறு கொண்ட சிம்சா மின் உற்பத்தி நிலையம் மூழ்கும். மேகதாது அணையில் இருந்து 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். அதனால் மின் உற்பத்தியில் எந்த இழப்பும் உண்டாகாது. அதனால் சிம்சா மின் உற்பத்தி நிலையத்தை கர்நாடகம் தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆசியாவின் முதல் மின் உற்பத்தி நிலையம் என்று பெயர் எடுத்துள்ள சிம்சா மின் உற்பத்தி நிலையம் 100 ஆண்டுகள் வரலாற்றை கொண்டுள்ளது. இதை பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com