6 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிவிட்டது தவெக - அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு

திமுகவுடன் எந்தவொரு நேரத்திலும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி|
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அதிமுகவில் இபிஎஸ் அணி, எஸ்.பி. வேலுமணி அணி என இரண்டாகப் பிரிந்தது. பின்னர் பல அரசியல் கட்ட நகர்வுகளுக்கு பிறகு இரு அணிகளும் இணைந்தன.

குதிரை பேரம்

எனினும் அதிமுகவைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இவர்களிடம் தவெக அரசு குதிரை பேரம் நடத்தியதாக ஏற்கெனவே பேரவைத் தலைவரிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் இன்று அதிமுக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.

தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக அதிமுக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தபின் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

அதிமுக எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடந்துள்ளது. அதுபற்றி விசாரிக்க வேண்டும். குதிரை பேரம் தொடர்பாக புகார் அளித்தும் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்காததால் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளளோம்.

6 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிவிட்டது தவெக. எம்எல்ஏக்கள் பதவி விலகல் செய்த உடனே தவெக உறுப்பினர் அட்டை வழங்கப்படுகிறது. ஆட்சியை காப்பாற்றுவதற்காக குதிரை பேரம் நடக்கவில்லை என்று தவெகவினர் கூறுகிறார்கள். உள்ளே நடந்தது என்ன என்று மக்களுக்கு தெரியும்.

அதிமுக திமுக கூட்டணியா?

அதிமுகவில் எந்தவிதமான உள்கட்சி பூசலும் இல்லை. மாவட்ட வாரியாக ஆலோசனையை நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அவரின் தலைமையின் கீழ் கட்டுப்பட்ட இயக்கமாக அதிமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது. திமுக -அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை. தீயசக்தி திமுகவை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் அதிமுக. எந்த காலத்திலும் அவர்களுடன் ஒன்றுசேராது என்று கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com