

'டைரக்ட் டு மொபைல்' எனப்படும் புதிய ஒளிபரப்பு தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் விரைவில் மொபைல் போன்களில் இன்டர்நெட் வசதி இல்லாமலேயே நேரடியாக டிவி நிகழ்ச்சிகளை பார்க்கும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 'டைரக்ட் டு மொபைல்' எனப்படும் புதிய ஒளிபரப்பு தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது மொபைல் போன்களில் யூடியூப், ஓடிடி தளங்கள் மற்றும் நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க இன்டர்நெட் அல்லது மொபைல் டேட்டா தேவைப்படுகிறது. ஆனால் டிடுஎம் (D2M) தொழில்நுட்பத்தில் இன்டர்நெட் இணைப்பு, வைபை அல்லது மொபைல் நெட்வொர்க் இல்லாமலேயே நேரடியாக மொபைல் போன்களில் டிவி நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். இந்த தொழில்நுட்பம் எப்.எம். ரேடியோ செயல்படுவதைப் போன்ற முறையில் செயல்படும். அதாவது, ஒளிபரப்பு அலைவரிசைகள் மூலம் மொபைல் போன்களுக்கு நேரடியாக நிகழ்ச்சிகள் அனுப்பப்படும்.
இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்தால், நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். செய்திகள். கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள்.பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள். அவசரகால எச்சரிக்கை தகவல்கள் ஆகியவற்றை மொபைல் போன்களில் பார்க்கவும் பெறவும் முடியும். இதற்காக மொபைல் டேட்டாவை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இதனால் டேட்டா செலவும் மிச்சமாகும்.
மத்திய அரசின் பொதுத்துறை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, ஐஐடி கான்பூர் மற்றும் தேஜஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி சோதனை செய்து வருகிறது. டெல்லி, பெங்களூரு உள்பட 19-க்கும் மேற்பட்ட நகரங்களில் இதற்கான சோதனைகள் நடைபெற்றுள்ளன.
தொழில்நுட்ப சோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், இதனை வணிக ரீதியாக பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான நிறுவனங்களை தேர்வு செய்ய அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான ஒப்பந்தப்புள்ளியை விரைவில் வெளியிட பிரசார் பாரதி திட்டமிட்டுள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான வசதி இல்லை. இதற்காக பிரத்யேகமான ரிசீவர், ஆண்டெனா உள்ளிட்ட வன்பொருள் வசதிகள் தேவைப்படும். எனவே, இந்த தொழில்நுட்பம் சப்போர்ட் செய்யும் வகையில் தயாரிக்கப்படக்கூடிய மொபைல் போன்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த வசதியை கட்டாயம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிடவில்லை. விருப்பத்தின் அடிப்படையிலேயே இந்த வசதியை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் இன்டர்நெட் வசதி இல்லாத பகுதிகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மொபைல் மூலம் பார்க்கும் வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.