

வாட்ஸ்அப் கணக்கு இல்லாதவர்களும் அழைப்பில் பங்கேற்கும் வகையில், ‘கெஸ்ட் காலிங்’ (Guest Calling) என்ற புதிய வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதியின் மூலம், அழைப்பில் பங்கேற்பவர்கள் அனைவரும் இலவசமாகவும், பாதுகாப்பாகவும், நேரக் கட்டுப்பாடு இன்றியும் பேச முடியும்.
வாட்ஸ்அப்-ன் கெஸ்ட் காலிங் வசதி மூலம், வாட்ஸ்அப் கணக்கு வைத்திருப்பவர்கள் அழைப்புக்கான இணைப்பை (Call Link) உருவாக்கி, மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டும். அந்த இணைப்பை பெறுபவர்கள், தங்களது கணினி உலாவி (Browser) வழியாக தங்களது பெயரை உள்ளிட்டு அந்த அழைப்பில் பங்கேற்கலாம். இதற்கு வாட்ஸ்அப் கணக்கு வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
தனிநபர் அழைப்புகள் மற்றும் குழு அழைப்புகளில் அதிகபட்சம் 32 பேர் வரை பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்புகளில் விருந்தினராக (Guest) இணைபவர்கள் அழைப்பை ஏற்பாடு செய்தவரின் அனுமதி பெற்ற பிறகே உள்ளே செல்ல முடியும். அதுவரை அவர்கள் காத்திருப்பு அறையில் (Waiting Room) வைக்கப்படுவார்கள். அழைப்பை உருவாக்கியவர்களால் அவர்களை எந்த நேரத்திலும் அழைப்பில் இருந்து வெளியேற்ற முடியும்.
விருந்தினராக பங்கேற்பவர்கள் அழைப்பில் உள்ள மற்றவர்களின் செல்போன் எண்களைப் பார்க்கவோ, அவர்களுக்கு மெசேஜ் அனுப்பவோ முடியாது. மேலும் பிறரை நேரடியாக அந்த அழைப்பில் இணைக்க முடியாது.
அவர்கள் தங்களது கணினித் திரையைப் பகிர முடியும். தகவல்களைப் பார்வையிடவும், பணிகளை ஒருங்கிணைக்கவும் முடியும். மேலும் தம்ப்ஸ் அப், ஹார்ட் உள்ளிட்ட எமோஜிகளை பயன்படுத்த முடியும். இந்த அழைப்புகள் End-to-End Encryption பாதுகாப்புடன் செயல்படும்.
இந்த கெஸ்ட் காலிங் வசதியைப் பயன்படுத்த, வாட்ஸ்அப் செயலியில் உள்ள ‘Calls’ பகுதிக்குச் சென்று, ‘+’ குறியீட்டைத் தேர்வு செய்து, அழைப்புக்கான இணைப்பை உருவாக்கி, யாருடன் பேச விரும்புகிறோமோ அவர்களுக்கு அனுப்ப வேண்டும். அழைப்புக்கான இணைப்பை உருவாக்க வாட்ஸ்அப் கணக்கு அவசியம்.
மேலும், கூகுள் மற்றும் அவுட்லுக் காலண்டர் வழியாக வாட்ஸ்அப் அழைப்புகளை உருவாக்கும் வசதியும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக வாட்ஸ்அப் Plugin-ஐ இன்ஸ்டால் செய்து, வாட்ஸ்அப் கணக்கை இணைக்க வேண்டும். அதன்பிறகு வாட்ஸ்அப் அழைப்பு இணைப்பைச் சேர்க்கலாம். இந்த இணைப்பை பெறுபவர்கள் வாட்ஸ்அப் கணக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அழைப்பில் பங்கேற்க முடியும்.
எங்கிருந்தாலும், யாருடன் பேச விரும்பினாலும் பாதுகாப்பான முறையில் வாட்ஸ்அப் அழைப்புகளைப் பயன்படுத்த முடியும் என்பதற்காக இந்தப் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.