திருவிடைமருதூர் மகாலிங்க சாமி கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி

திருவிடைமருதூர் மகாலிங்க சாமி கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவிடைமருதூர் மகாலிங்க சாமி கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி
Published on

கும்பகோணம்;

திருவிடைமருதூர் மகாலிங்க சாமி கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

மகாலிங்க சாமி கோவில்

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மகாலிங்கசாமி கோவில் உள்ளது.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக தரோட்டம் மற்றும் தீர்த்தவாரி தடை செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் கவலை அடைந்தனர். இந்த ஆண்டு தைப்பூச விழா அரசின் பாதுகாப்பு வழிமுறைகளுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் 5 தேர்களின் வீதிஉலா நடைபெற்றது. விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி நேற்று மதியம் திருவிடைமருதூர் காவிரி ஆற்றங்கரையில் நடைபெற்றது.

தீர்த்தவாரி

இதையொட்டி நேற்று காலை விநாயகர், வள்ளி தெய்வானை முருகர், மகாலிங்க சுவாமி, பிரகத் சுந்தரகுசாம்பிகை, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சாமிகள் கோவிலில் இருந்து தனித்தனி வாகனங்களில் புறப்பட்டு வீதிஉலாவாக காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள தீர்த்தவாரி கட்டத்தை அடைந்தனர். பின்னர் அங்கு அஸ்திர தேவருக்கு மஞ்சள் பால் உள்ளிட்ட மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு மதியம் 3 மணி அளவில் காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள்

தீர்த்தவாரியை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அஸ்திரதேவர் தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது பக்தர்கள் அனைவரும் ஆற்றில் இறங்கி புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து வீரசோழன் ஆற்றங்கரையில் உள்ள மணி மண்டபத்தில் அம்பாளுடன் மகாலிங்க சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com