பெஸ்ட் பஸ்சில் பயங்கர தீ- பயணிகள் உயிர் தப்பினர்

அந்தேரி ரெயில் நிலையம் அருகே பெஸ்ட் பஸ்சில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பெஸ்ட் பஸ்சில் பயங்கர தீ- பயணிகள் உயிர் தப்பினர்
Published on

மும்பை, 

அந்தேரி ரெயில் நிலையம் அருகே பெஸ்ட் பஸ்சில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தீ விபத்து

மும்பை அந்தேரி கிழக்கு ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு 7 மணி அளவில் பயணிகளுடன் பெஸ்ட் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் முன்பகுதியில் திடீரென கரும்புகையுடன் தீ பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்ட பஸ் டிரைவர் உடனடியாக நிறுத்தினார். பயணிகளை அவரசமாக இறங்குமாறு தெரிவித்தார்.

இதன்படி பஸ்சில் இருந்த பயணிகள் அவரசமாக கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் பஸ்சில் தீ பிடித்து எரிய தொடங்கியது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் வரும்முன்பே பஸ் முழுவதும் தீ பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.

போக்குவரத்து பாதிப்பு

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் பஸ்சில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அசாம்பாவிதம் ஏற்படா வண்ணம் சாலையில் வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் அந்த வழியாக செல்லும் வாகனங்களை மாற்று வழிப்பாதையில் திருப்பி விடப்பட்டது. மேலும் வேடிக்கை பார்த்த பொதுமக்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

சுமார் 1 மணி நேரமாக பஸ்சில் பற்றிய தீயை முற்றிலும் அணைத்தனர். தீ விபத்தில் பெஸ்ட் பஸ் முழுவதும் எரிந்து எலும்புகூடாக காட்சி அளித்தது. பெஸ்ட் பஸ்சில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com