தர்மபுரி அருகே கிரேன் அறுந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலி கிணற்றில் தூர்வாரும்போது பரிதாபம்

கிரேன் அறுந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலி
தர்மபுரி அருகே கிரேன் அறுந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலி கிணற்றில் தூர்வாரும்போது பரிதாபம்
Published on

தர்மபுரி:

தர்மபுரி அருகே கிணற்றை தூர்வாரும் பணியின்போது கிரேன் அறுந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலியானார்கள். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூர்வாரும் பணி

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே குரும்பர் கொட்டாய் கிராமம் உள்ளது. இங்குள்ள ஒரு விவசாய கிணற்றை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கிரேன் உதவியுடன் கிணற்றை தூர்வாரி ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த குழுவில் இண்டமங்கலத்தைச் சேர்ந்த சின்னசாமி (வயது 45), வகுத்துப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் (50) உள்ளிட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை இருட்டும் நேரத்தில் கிணற்றின் ஆழத்தில் இருந்து கற்கள் கிரேன் மூலம் மேலே கொண்டு செல்லப்பட்டன. அப்போது, எதிர்பாராதவிதமாக கிரேன் அறுந்து கிணற்றுக்குள் விழுந்தது.

2 பேர் பலி

இதில், கிரேனின் இரும்பு பாகங்கள் மற்றும் கற்கள் விழுந்ததால் கிணற்றுக்குள் இருந்த சின்னசாமி, ஆறுமுகம் ஆகிய இருவரும் படுகாயமடைந்து மயங்கினார்கள். இதைப் பார்த்ததும் கிணற்றின் மேல் பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த கிருஷ்ணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியை தொடங்கினார்கள்.

இரவாகி விட்டதால் கிணற்றுக்குள் இறங்கி மீட்பு பணியை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் 80 அடி ஆழ கிணற்றில் இறங்கி பார்த்தபோது படுகாயம் அடைந்த 2 பேரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. பலியான 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பரிதாப சம்பவம் குறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

.................

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com