

நாகர்கோவில்,
தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண ஆழ்குழாய் கிணறு அமைக்க ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.
மாணவர்கள் போராட்டம்
நாகர்கோவில் கோட்டாரில் அமைந்துள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி வளாகத்திலேயே, இக்கல்லூரியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதிகள் உள்ளன.
இந்தநிலையில் மாணவர்கள் விடுதியில் உள்ள கழிப்பறை மற்றும் குளியலறையில் சரியாக தண்ணீர் வரவில்லை என கூறியும், தண்ணீர் வசதி செய்துதர வேண்டும் என வலியுறுத்தியும் நேற்று முன்தினம் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆய்வு
இதுபற்றிய தகவல் அறிந்த நாகர்கோவில் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வும், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான சுரேஷ்ராஜன் நேற்று காலை திடீரென அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் மாணவ- மாணவிகளின் விடுதிகள், அங்கு அவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், சமையல் அறை, அங்கு சமைக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் வகுப்பறைகள், ஆய்வுக்கூடம், நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ரூ.2 லட்சம் ஒதுக்கீடு
மேலும் மாணவ- மாணவிகள், நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது மாணவர்கள் தண்ணீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். நோயாளிகளும் தண்ணீர் வசதி செய்யவேண்டும், போதிய அளவு மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கூறினர்.
பின்னர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் கிளாரன்ஸ் டேவி உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்களிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது கல்லூரியின் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வுகாண தனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 லட்சம் ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்தார்.
பின்னர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
நிவர்த்தி செய்யப்படும்
குமரி மாவட்ட அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை தி.மு.க. ஆட்சியில் அப்போது துணை முதல்-அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் விடுதிக்கு சூரியஒளி மின் அடுப்பு அமைப்பதற்காக எனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ஏற்கனவே ரூ.5 லட்சம் ஒதுக்கியுள்ளேன். தற்போது மாணவர்கள் மற்றும் நோயாளிகளின் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக ஆழ்குழாய் கிணறு அமைக்க ரூ.2 லட்சம் எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் குறைகள் நிச்சயமாக இன்னும் 1 மாத காலத்துக்குள் நிவர்த்தி செய்யப்படும்.
நடவடிக்கை
இந்த மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தினமும் 600 முதல் 700 வெளி நோயாளிகள் வந்து செல்கிறார்கள். உள்நோயாளிகளாக 120 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுக்கை வசதி 100 பேருக்கு உள்ளது. மேலும் 200 படுக்கை வசதி அமைக்க இடவசதி இருந்தும், அரசு அதற்கான நிதியை ஒதுக்காததால் கூடுதலாக படுக்கை வசதிகளை மேற்கொள்ள முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மருந்துகள் வாங்க ரூ.23 லட்சம் அரசால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும் ரூ.75 லட்சம் வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக அரசின் உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கூறினார்.
ஆய்வின்போது தி.மு.க. நகர செயலாளர் வக்கீல் மகேஷ், நிர்வாகிகள் சேக்தாவூது, சிவராஜ், நாஞ்சில் மணி, அழகம்மாள் தாஸ் மற்றும் ஆயுர்வேத மருத்தவக்கல்லூரி பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.